செந்தில்பாலாஜி file image
தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி; ஆனால்.. - உத்தரவின் முழு விவரம்!

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

webteam

செய்தியாளர் - முகேஷ்

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இரண்டாவது முறையாக அவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று நடைபெற்றது.

SenthilBalaji | ED

முன்னதாக பிப்ரவரி 14, 15, 21ஆம் தேதிகளில் நடைபெற்ற விசாரணையின்போது செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், அமலாக்கத் துறை தரப்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

செந்தில் பாலாஜி தரப்பு வாதம்...

செந்தில் பாலாஜி தரப்பில், “வழக்கில் ஆதாரங்கள் திருத்தப்பட்டுள்ளன. தற்போது செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லை. புலன் விசாரணை முடிந்து, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. தற்போது அமைச்சராக இல்லாத காரணத்தால் சந்தர்ப்ப சூழல் மாறியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவாக இருக்கிறார் என்பதற்காக ஜாமீன் மறுக்க முடியாது. நீண்டகாலம் சிறையில் உள்ள அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும். நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயார்” என வாதிடப்பட்டது.

அமலாக்கதுறை தரப்பு வாதம்...

செந்தில் பாலாஜி தரப்பின் இந்த வாதங்களை மறுத்த அமலாக்கதுறை தரப்பு, “எந்த ஆதாரங்களும் திருத்தப்படவில்லை. போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மொத்தம் 67 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்குகளில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள், சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.-க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து பெறப்பட்டன. செந்தில் பாலாஜி, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை தவிர, வேறு எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

இருப்பினும் இன்னமும் அவர் செல்வாக்கான நபராக உள்ளதால் ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்கக் கூடும். ஜாமீனில் விடுதலையானால் எந்த குற்றத்திலும் ஈடுபட மாட்டார் என நம்ப எந்த காரணமும் இல்லை. நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைக்காத அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது” என வாதிடப்பட்டது.

Madras high court

இருதரப்பு வாதங்களும் பிப்ரவரி 21ம் தேதி முடிவடைந்த நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார்.

செந்தில்பாலாஜி கைதாகி இன்றுடன் 259 நாட்களாகி உள்ள நிலையில், ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவில் எந்த தகுதியும் இல்லை” எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
செந்தில் பாலாஜி

அதேசமயம், செந்தில் பாலாஜி, கடந்த எட்டு மாதங்களாக சிறையில் உள்ளதாகக் கூறுவதால், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கை மூன்று மாதங்களில், தினந்தோறும் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.