செந்தில் பாலாஜி, உச்ச நீதிமன்றம் file image
தமிழ்நாடு

”எப்போது வேண்டுமானாலும் பக்கவாதம் ஏற்படலாம்” - செந்தில்பாலாஜியிடம் ஆவணங்களை கேட்கும் உச்சநீதிமன்றம்!

Prakash J

சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் பிணை மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் 8 முறை தள்ளுபடி செய்துள்ளது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதிகள் பீலா எம். திரிவேதி மற்றும் சதீஷ் சந்திரா சர்மா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி, செந்தில் பாலாஜிக்கு சமீபத்தில்கூட சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மருத்துவ பிணை மட்டுமே கோருவதாகவும் வாதிட்டார். செந்தில் பாலாஜிக்கு கடந்த 15ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட எம்.ஆர்.ஐ. பரிசோதனை மூலம் அவருக்கு எப்போது வேண்டுமானாலும் பக்கவாதம் ஏற்படலாம் என தெரியவந்ததாகவும் வாதிட்டார்.

செந்தில் பாலாஜி

அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் மேத்தா, செந்தில் பாலாஜிக்கு உள்ள மருத்துவ காரணங்கள் நாள்பட்ட பிரச்சனை என வாதம் முன்வைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், செந்தில்பாலாஜிக்கு மேற்கொள்ளப்பட்ட எம்ஆர்ஐ பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட மருத்துவ ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிக்க: கோலியின் 48-வது சதம் சாத்தியமானது எப்படி.. இந்திய தோல்விக்கு நடுவரைக் காரணம் கூறுவது நியாயமா?