செந்தில்பாலாஜி file image
தமிழ்நாடு

ஜாமீன் மனு தள்ளுபடி.. 8 நாட்கள் அமலாக்கத் துறை காவல்; ஆனால்.. - நீதிமன்றம் உத்தரவு முழுவிபரம்

செந்தில் பாலாஜியை 8 நாட்கள் அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

Prakash J

செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடையவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகம் ஆகியவற்றில் அமலாக்கத் துறையினர் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். ஜூன் 14 நள்ளிரவில் சோதனையை நிறைவு செய்த அதிகாரிகள், அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறியதால் சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அவர் உட்படுத்தப்பட்டார்.

அவருக்கு வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம் தரப்பில் உத்தரவிட்டது. அவருக்கு உடனடியாக பைபாஸ் சர்ஜரி செய்ய ஓமந்தூரார் மருத்துவமனை அறிவுறுத்தியதைத் தொடர்ந்து இதுதொடர்பாக மனு தாக்கல் செய்யப்பட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அதன்படி, அவரை உடனடியாக காவேரி மருத்துவமனைக்கு மாற்ற உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.

8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு

இந்த உத்தரவுக்குப் பிறகு, செந்தில்பாலாஜி இடைக்கால ஜாமீன் மனு மீதும், நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய அமலாக்கத் துறை மனு மீதான விசாரணை நேற்று மாலை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களும் நிறைவுபெற்ற நிலையில், தீர்ப்பு தள்ளி வைக்கப்படுவதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், செந்தில் பாலாஜியை 8 நாட்கள் அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

ஜாமீன் மனு தள்ளுபடி

வரும் 23ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மருத்துவமனையிலேயே அமலாக்கத் துறை விசாரிக்கலாம் என அது அறிவுறுத்தியுள்ளது. விசாரணைக்குப் பிறகு செந்தில் பாலாஜியை வரும் 23ஆம் தேதி காணொளி வாயிலாக ஆஜர்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், செந்தில் பாலாஜியின் இடைக்கால ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது. அதேநேரத்தில், ’பைபாஸ் அறுவைசிகிச்சை செய்ய இருப்பதால் காவல் வழங்கினால் உடல்நிலை பாதிக்கப்படும்’ என செந்தில் பாலாஜி கோரிக்கை வைத்துள்ளார்.