தமிழ்நாடு

செஞ்சி அருகே இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம்: எஸ்.ஐ ஆயுதப் படைக்கு மாற்றம்

செஞ்சி அருகே இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம்: எஸ்.ஐ ஆயுதப் படைக்கு மாற்றம்

webteam

செஞ்சி அருகே இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் முறையான நடவடிக்கை மேற்கொள்ளாத பெரியதச்சூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வினோத் ராஜ், ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த காரை கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல்(26). இவர் விழுப்புரம் பெட்ரோல் பங்க் ஒன்றில் பணியாற்றி
வந்தார். இந்நிலையில் கடந்த இருதினங்களுக்கு முன்பு தனது வீட்டிலிருந்து பணிக்குச் சென்ற வினோத்ராஜ், வழியில் இயற்கை உபாதையை கழிக்க செ.புதூர் அருகே உள்ள மலைப்பகுதிக்கு வேகமாக சென்றுள்ளார்.

அப்போது அருகில் உள்ள வயலில் தனியாக வேலை செய்துகொண்டிருந்த பெண்மணி, சக்திவேல் தன்னிடம் தவறாக நடந்துகொள்ளவே வருவதாக நினைத்துக்கொண்டு கூச்சலிட்டதாக கூறப்படுகிறது. பெண்ணின் கூச்சலைக் கேட்டு அருகிலிருந்தவர்களும் உறவினர்களும் ஓடி வந்துள்ளனர்.
இதனால் பயந்து அங்கிருந்து ஓடிய சக்திவேலை விரட்டிச் சென்ற அவர்கள், சக்திவேலை பிடித்து கை கால்களை கட்டி சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் சக்திவேலுக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது.

இதனிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், காயமடைந்த சக்திவேலை மீட்டு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கிருந்து வீட்டுக்குச் சென்ற சக்திவேல் வீட்டிலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து சக்திவேல் குடும்பத்தார் கொடுத்த புகாரின் படி, கூச்சலிட்ட பெண் அவரது கணவர் ராஜா உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

சக்திவேல் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் காரை கிராமத்திற்கு சென்றார். அப்போது, இறந்த சக்திவேலின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் காவல் உதவி ஆய்வாளர் வினோத், எதிர் தரப்புக்கு செயல்பட்டு வருவதால் அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கூறினார். இந்நிலையில் பெரியதச்சூர் காவல் நிலைய உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த வினோத் தற்போது விழுப்புரம் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ளார்.