உதயநிதி, துரைமுருகன் pt web
தமிழ்நாடு

துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பதவிகள்.. சீனியர் vs ஜூனியர்.. திமுகவில் என்ன நடக்க வாய்ப்பு?

PT WEB

துணை முதலமைச்சர்

கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரத்தில் அதிகம் பேசப்பட்டு வரும் விவகாரங்களில் ஒன்று, தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் பதவி குறித்ததுதான். விரைவில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும், தற்போது அமைச்சராகவுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் வெளியான செய்திகள், மாநில அளவில் மட்டுமின்றி தேசிய அளவிலும் கவனம் பெற்றன.

உதயநிதி

திமுக இளைஞரணியின் 45ஆவது ஆண்டு தொடக்க விழாவிலும், உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக வர வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேடையில் பேசிய நிர்வாகிகளும் அதனை வலியுறுத்தினர். இதன் பின்னர் பேசிய உதயநிதி ஸ்டாலின், தனக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படப் போவதாக வெளியான செய்தி வதந்தி என விளக்கம் அளித்தார்.

துணைமுதல்வர் பதவி யார் வேண்டாம் என்பார்கள்

இந்நிலையில் இன்று, வேலூர் மாவட்டம் காட்பாடியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்தார் அமைச்சர் துரைமுருகன். பின்னர், துணை முதல்வர் பதவி உங்களுக்கு கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாக ஒருவர் கூற, அதற்கு பதிலளித்த துரைமுருகன், “துணை முதல்வர் பதவி கொடுத்தால் யார்தான் வேண்டாம் என சொல்லுவார்கள்? அப்படி கிடையாது, நிர்வாகத்தில் அனைவரும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு என்று ஒன்று இருக்கிறது. கூட்டு மந்திரி சபையாகத்தான் நாங்கள் இயங்குகிறோம். தலைவர் என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு சாதகமாகத்தான் செல்வோம்” என தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர் ப்ரியன்

இதுதொடர்பாக நம்மிடையே பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், “துரைமுருகன் பொதுவாக அரசியல் கேள்விகளுக்கு பதில் சொல்லும்போது கொஞ்சம் நகைச்சுவை உணர்வுடன்தான் பதில் சொல்லுவார். எனவே, துணை முதலமைச்சர் பதவி கொடுத்தால் யார் வேண்டாம் என்பார்கள் என்ற பதிலை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்பது என் கருத்து.

துரைமுருகனுக்கு வாய்ப்பு குறைவு

அதேசமயத்தில் கட்சியில் இருக்கும் பலர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று குரல் கொடுப்பதையும் பார்க்கின்றோம். இத்தகைய சூழல் எல்லாம் துரைமுருகனுக்கு தெரியாத விஷயம் கிடையாது. எனவே துரைமுருகன் அதை நகைச்சுவை உணர்வுடன்தான் அதை பேசியிருப்பார்.

அமைச்சர் துரைமுருகன்

உதயநிதி துணை முதல்வர் ஆக வேண்டும் என கட்சியினர் தெரிவிப்பது கூட கட்சி விவகாரமாகத்தான் இருக்கிறது. முதலமைச்சர் இதில் எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை. 2026க்கு முன்னால், இதுதொடர்பாக ஏதும் முடிவெடுப்பாரா என்பது கூட சந்தேகத்திற்குறிய விஷயமாகத்தான் நான் பார்க்கிறேன். அதேசமயத்தில் சீனியர்கள் வழிவிட்டு இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்ற கருத்துகூட திமுகவில் இருக்கிறது.

எனவே, அமைச்சரவை மாற்றத்தில் என்ன மாதிரியான மாற்றங்களை ஸ்டாலின் கொண்டு வருவார் என்பது தெரியாது. ஆனால், துணை முதலமைச்சர் என்ற பதவி வருமானால் அது உதயநிதிக்குத்தான் இருக்குமே தவிர, துரைமுருகனுக்கான வாய்ப்பு குறைவு” என தெரிவித்தார்.