‘கஜா’புயலால் பாடப்புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு, ஒருவார காலத்திற்குள் பாடநூல்கள் வழங்கப்படுவதற்காக துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
‘கஜா’ புயல் கடந்த 15ஆம் தேதி இரவு நாகை - வேதாரண்யம் இடையே கரையைக் கடந்தது. இதில் நாகை, புதுக்கோட்டை, திருவாரூர்,
தஞ்சை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடும் சேதத்திற்கு உள்ளாகின. ஏராளமான பயிர்களும், வீடுகளும், பொருட்களும்
சேதம் அடைந்தன.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆனால் அரசு தரப்பில் இருந்து பெரும்பாலும் நிவாரணம் ஏதும் கிடைக்கவில்லை என பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டை முன் வைத்து
வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் மரங்களும் மின் கம்பங்களும் சாய்ந்து போக்குவரத்து மற்றும் மின் இணைப்பு கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளது. அவற்றை சீர் செய்யும் பணியில் பணியாளர்கள் இறங்கியுள்ளனர்.
இதனிடையே தங்கள் துறை சார்ந்த சேதங்களை சீர் செய்வது குறித்து அந்தந்த துறை அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ‘கஜா’புயலால் பாடப்புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு, ஒருவார காலத்திற்குள் பாடநூல்கள் வழங்கப்படுவதற்காக துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.