தமிழ்நாடு

மின் கொள்முதல்: ட்விட்டரில் வார்த்தை போர் நடத்தும் அண்ணாமலை Vs செந்தில் பாலாஜி

மின் கொள்முதல்: ட்விட்டரில் வார்த்தை போர் நடத்தும் அண்ணாமலை Vs செந்தில் பாலாஜி

Sinekadhara

பொய்ப்புகார் கூறி ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தப் பார்க்கும் அண்ணாமலை, அதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

மின் கொள்முதலில் ஊழல் புகார் கூறிய பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பதில் அளித்த நிலையில், ஆதாரம் என்று அண்ணாமலை வெளியிட்ட ட்விட்டருக்கு அமைச்சரும் ட்விட்டரிலேயே பதில் அளித்துள்ளார். மின்வாரியத்துறையில் முறைகேடு நடந்ததாக அண்ணாமலை கூறியதற்கு ஆதாரம் கேட்டால், வாரிய அலுவலகத்துக்கு அனுப்பிய நிதியை யாருக்கு அனுப்பியது எனத் தெரியாமல் திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட எக்செல்லில் இருந்தும், அந்தத் தொகையை சரியாக எழுதத் தெரியாமலும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார் என்று அமைச்சர் விமர்சித்துள்ளார்.

4 சதவிகித கமிஷன் என மீண்டும் பொய்கூறி ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தப் பார்க்கும் அண்ணாமலை, இதற்கான ஆதாரத்தையும் வெளியிட வேண்டும் என்றும், அல்லது அவர்களின் வழக்கப்படி மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் அமைச்சர் பதிவிட்டுள்ளார்.

இதற்கு ட்விட்டரில் மீண்டும் பதில் அளித்துள்ள அண்ணாமலை, கடந்த வாரம் ஒரு யூனிட் மின்சாரம் 20 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அனல் மின்சாரத்தின் உற்பத்திச் செலவை விட 5 மடங்கு இது அதிகம் என்றும் கூறியுள்ளார். ஆனால், ஒரு யூனிட் 20 ரூபாய்க்கு வாங்கியதற்கான சூழலை அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்கனவே தனது பேட்டியில் விளக்கமாக தெரிவித்துள்ளார்.