Selvaperunthagai pt
தமிழ்நாடு

விவசாயி மகன் - தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்.. யார் இந்த செல்வப் பெருந்தகை?

புரட்சி பாரதம், புதிய தமிழகம் மற்றும் விசிக என்று பல்வேறு கட்சிகளில் பயணித்து காங்கிரஸ் கட்சிக்கு சட்டமன்ற குழுத் தலைவராக இருந்து வந்த செல்வப் பெருந்தகை, தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

யுவபுருஷ்

காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக செல்வப்பெருந்தகையை நியமித்து அதிரடி காட்டியுள்ளது காங்கிரஸ் தலைமை. 2021-ம் ஆண்டு தமிழ்நாட்டில் 18 இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்ற நிலையில், அடுத்த சில நாட்களில் அக்கட்சிக்காக சட்டமன்ற குழுத்தலைவரானார் செல்வப்பெருந்தகை.

2019-ல் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக கே.எஸ் அழகிரி நியமிக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆன நிலையில், விரைவில் மாற்றப்படுவார் என்று தகவல் கடந்த சில மாதங்களாகவே வெளியாகி வந்தது. இந்த நிலையில்தான், சத்தமே இல்லாமல் புதிய தலைவருக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது காங்கிரஸ் தலைமை.

யார் இந்த செல்வப்பெருந்தகை?

இந்த நேரத்தில் யார் இந்த செல்வப்பெருந்தை என்பதை சற்று திரும்பிப்பார்க்கலாம்.

தேசிய கட்சியின் தமிழக தலைவராக உட்கார்ந்துள்ள செல்வப்பெருந்தகை பிறந்தது என்னவே ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில்தான். சென்னைக்கு உட்பட்ட படப்பை - மணிமங்கலத்தில் பிறந்த இவர், சட்டப்படிப்பை முடித்த பிறகு சென்னை உயர்நீதிமன்ற பார் கவுன்சிலில் உறுப்பினராக பதிவு செய்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணுவை ரோல் மாடலாக வைத்து பணி செய்யத் தொடங்கிய செல்வப்பெருந்தகை, புரட்சி பாரதம் மற்றும் புதிய தமிழகம் கட்சிகளில் இணைந்து பணியாற்றியுள்ளார். 16 ஆண்டுகால ரிசர்வ் வங்கி பணிக்குப் பிறகு 2001 சட்டமன்ற தேர்தலுக்குப் பின் தேர்தல் அரசியலில் நுழைந்தார்.

விசிக -காங்கிரஸ்! 

அந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்த இவர், சில ஆண்டுகளில் முக்கிய பதவிகளை வகித்து பொதுச்செயலாளராகவே மாறினார். 2006-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் விசிக சார்பில் வென்றவர்கள் இருவரில் ஒருவராக இருந்த செல்வப்பெருந்தகை, அப்போது விசிகவின் சட்டமன்ற குழு தலைவராக செயல்பட்டார். ஆனால், திருமாவளவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, விசிகவில் இருந்து விலகியவர், பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்து அதன் மாநில தலைவர் ஆனார்.

தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியில் இளம் தலைவராக இருந்த ராகுல் காந்தியை சந்தித்து அக்கட்சியில் இணைந்தவர், 2011 மற்றும் 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் செங்கம் மற்றும் ஸ்ரீபெரம்பதூர் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர், 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டார். ஸ்ரீபெரம்பதூர் தொகுதியில் போட்டியிட்டவர் கிட்டத்தட்ட 1 லட்சத்து 15 ஆயிரம் வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார். அதனைத் தொடர்ந்தே, கட்சியின் சட்டமன்றத் தலைவராக பொறுப்பேற்றார்.

சமீப காலமாக காங்கிரஸில் பட்டியலினத்தவர் பலர் எம்.எல்.ஏ மற்றும் எம்.பி பிரதிநிதித்துவத்தை பெற்றாலும், மாநில அளவில் தலைவர் பதவியை பெறாமல் இருந்த நிலையே நீடித்தது. அந்த குறையை நீக்கி தலைவர் பதவியில் அமர்ந்துள்ளார் செல்வப்பெருந்தகை. அவர் வகித்த கட்சியின் சட்டமன்ற குழுத்தலைவராக சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.