டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் திமுகவினர் அவர்கள் நடத்தும் மது ஆலைகளை மூடத் தயாராக இருக்கிறார்களா என செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர், கருப்புச் சின்னம் அணியவும், அவரவர் வீடுகளின் முன்பே இருந்து கண்டன முழக்கங்களை எழுப்பவும் அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தின் முன் நின்று கண்டன முழக்கங்களை எழுப்பினார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களும் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் திமுகவினர் அவர்கள் நடத்தும் மது ஆலைகளை மூடத் தயாராக இருக்கிறார்களா என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை முனிச்சாலைப் பகுதியில் தூய்மைப்பணியாளர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் இவ்வாறு கூறினார்.
திமுக தான் மதுக்கடைகள் உருவாகவே காரணம் எனவும், ஒரு சந்ததியையே பாழ்ப்படுத்தியவர்கள் எனவும் கடுமையாகச் சாடினார். திமுக எம்.பிக்கள் மற்றும் அவர்களது பினாமிகளின் பெயரில் செயல்படும் மது ஆலைகளை மூடுவார்களா எனவும் அவர் வினவினார்.