செல்லூர் ராஜூ, ராகுல்காந்தி pt web
தமிழ்நாடு

“நான் பார்த்து நெகிழ்ந்த இளம் தலைவர் ராகுல்காந்தி”- பதிவை நீக்கினார் செல்லூர் ராஜூ

'தான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்' என ராகுல்காந்தி படத்தை வெளியிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ புகழாரம் சூட்டிய நிலையில் தற்போது அந்த பதிவை நீக்கியுள்ளார்.

PT WEB

பாஜக - அதிமுக கூட்டணி 2019 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை கூட்டாக சந்தித்தது. அதில், தோல்வியடைந்ததை தொடர்ந்து ஒருவித கசப்பு இருந்தது. இதனிடையே, இரு கட்சிகளும், ஒருவரை ஒருவர் மறைமுகமாகவும், நேரடியாகவும் விமர்சித்து வந்தனர். இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக-பாஜக கூட்டணி பிரிந்தது. இதனால், தங்களின் பிரதமர் வேட்பாளர் யாரென்ற கேள்விக்கு அதிமுக பதிலளிக்காமல் தவிர்த்து வந்தது.

இந்த நிலையில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு நாளான நேற்று உணவகம் ஒன்றில் ராகுல்காந்தி அமர்ந்து சாப்பிட்ட காட்சியை தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, 'தான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்' என புகழாரம் சூட்டியிருந்தார். ராகுலின் எளிமைக்காக பதிவிட்டேன் என விளக்கமளித்திருந்த அவர், வேறு எந்தக் காரணமும் இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, செல்லூர் ராஜூவின் புகழார வீடியோவை பகிர்ந்த விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், அண்ணனுக்கு நன்றி எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அந்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் இருந்து நீக்கியுள்ளார் செல்லூர் ராஜூ. இதுதொடர்பாக புதிய தலைமுறை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை தொடர்புகொண்டு கேட்டபோது, “இந்த பதிவு தொடர்பாக கட்சி என்னிடம் எதுவும் கேட்கவில்லை. கேட்கும் பட்சத்தில் இதுதொடர்பாக விளக்கமளிக்க தயாராக உள்ளேன்” என தெரிவித்திருந்தார்.

தொடர்ச்சியாக அவர் கூறிவந்தது ஒரு விஷயம்தான், “ராகுல்காந்தி முன்னாள் பிரதமரின் மகன், அவரது எளிமைக்காக இந்த வீடியோவை சாதரணமாகத்தான் பதிவிட்டேன். இதில் வேறு எந்த காரணமும் இல்லை” என்பதுதான். இந்நிலையில் வீடியோவை நீக்கியது குறித்து எந்தவொரு விளக்கமும் கொடுக்கவில்லை.

ஏற்கெனவே இந்த பதிவு அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை கிளப்பியது. காங்கிரஸ் கட்சியுடன் திமுக மிக நெருங்கிய கூட்டணியில் இருக்கும் நிலையில், அதிமுகவின் மூத்த மற்றும் முக்கியத் தலைவர் செல்லூர் ராஜூ இந்த பதிவை பதிவிட்டிருந்தது அரசியல் ரீதியாகவே விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.

காங்கிரஸ் கட்சிக்கு அதிமுக, தேர்தலுக்கு பின் ஆதரவு அளிக்குமா? என்ற கேள்வி எல்லாம் எழுந்தது. குறிப்பாக கட்சியில் செல்லூர் ராஜூவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என்பதன் காரணமாக அவர் கட்சி மாறப்போகிறாரா? என்ற யூகங்கள் எல்லாம் எழுந்தது. இருப்பினும் அந்த பதிவை 24 மணி நேரத்திற்கு உள்ளாக நீக்கியுள்ளார் செல்லூர் ராஜூ.