தமிழ்நாடு

“இயற்கை என்னை இறுதியாக அழைக்கிறபோது…” - சட்டசபையில் முதல்வரை நெகிழவைத்த அமைச்சர் சேகர்பாபு

“இயற்கை என்னை இறுதியாக அழைக்கிறபோது…” - சட்டசபையில் முதல்வரை நெகிழவைத்த அமைச்சர் சேகர்பாபு

Veeramani

இந்தியாவின் லீ குவான் யூ... நெல்சன் மண்டேலா... காரல் மார்க்ஸ்... நவீன சாக்ரடீஸ்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என சுமார் 15 நிமிடங்களுக்கு மேல் புகழ்ந்தார் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு.

சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் பதிலுரையில் பேசிய அமைச்சர் சேகர்பாபு சுமார் 15 நிமிடங்களுக்கு மேல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை உணர்ச்சி பொங்க புழ்ந்தார். அவையில் அவர் பேசிய போது, "எனது இந்த உரை புகழுரை அல்ல உலகுக்கு உரக்கச் சொல்லும் உண்மை உரை...ராசி இல்லை என்றார்கள் ஆனால் தங்களுக்கு ஆண்டவனின் அருளாசி சரியாகவே இருந்தது. ஜாதகத்தில் கட்டம் சரியில்லை என்றார்கள் ஆனால் சரித்திரத்தின் கட்டம் தலைவருக்கு சரியாகவே இருந்தது.

படைப்பதில் இவர் ஒரு லீ குவான் யூ, ஏழைகளுக்காக சிந்திப்பதில் நெல்சன் மண்டேலா, எளியவர்களின் உயர்வுக்காக செயலாற்றுவதில் காரல் மார்க்ஸ், அறநிலையத்துறையில் அன்னதானம் செய்ய வைத்த நவீன வள்ளலார். எங்கள் தொகுதியில் முதல்வர் மனுக்களுக்கு தீர்வு தந்த மனுநீதி சோழன், பெண் காவலரை பாதுகாக்கும் விதமாக பாதுகாப்பு பணியிலிருந்து நீக்கம் செய்த ரக்ஷாபந்தன் சகோதரர், மகளிருக்கு இலவச பேருந்து பயணம் எனும் உரிமையை தந்த திருமகனார், பூங்கொத்து வேண்டாம் புத்தகமே போதும் என்று சொன்ன நவீன சாக்ரடீஸ்,  மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட செய்த நவீன கங்கை கண்டான், பொதுமக்களின் அலைபேசிக்கு பதில் சொல்லும் எளியவர்.

ஏளனத்தை ஏணியாக்கி, அவமானத்தை அஸ்திவாரமாக்கி, வாழ்க்கையை வரலாறாக்கி, புடம் போட்ட தங்கமாய், கம்பீரமாய், தங்கமாய், அரிமா போல் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் என் தலைவரை மீண்டும் ஒருமுறை வணங்குகிறேன். அண்ணனாக, தம்பியாக, பிள்ளையாக, பேரனாக உறவு சொல்லி அழைக்கும் ஒரே சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி தான். செல்லும் இடமெல்லாம் புகழை விதைக்கும் உதயநிதிக்கு வாழ்த்துகள்.

மீண்டும் ஒரு திருநாவுக்கரசர் கிடைத்துள்ளார். நம் முதல்வருக்கு இருந்த துணிச்சலும், இடையறாத உழைப்புமே இன்று நம்மை ஆட்சி கட்டிலில் அமர்த்தியிருக்கிறது. 54 ஆண்டுகால பொது வாழ்க்கையில் முதல் பந்தில் இருந்தே சிக்ஸர் அடித்து வருகிறார் முதல்வர். கேட்காமல் கொடுக்கும் தெய்வம் நமது முதல்வர்.

இது பக்தியை வைத்து வன்முறையை தூண்டும் அரசு அல்ல. இது பக்தியை வைத்து வயிறு வளர்கின்ற அரசு அல்ல. இது மனித நேயத்தோடு பண்பட்ட பக்தியை வளர்கின்ற அரசு. தலைவரே நீங்கள் வடக்கிற்கு பணியாத தெற்கு. நிகரற்ற உங்கள் நிர்வாக திறமையை நெகிழ்ச்சியாக பார்க்கிறோம். கங்காரு தன் குட்டியை சுமந்து செல்வது போல என்னையும், என் குடும்பத்தையும் காப்பவர். எனக்கு அடக்கலமும் தந்து, படைக்கலமாகவும் ஏற்று கொண்டவர் நீங்கள் என்றென்றும் என் தலைவர் நான் உங்கள் தொண்டன்.

நான் தடுமாறி விழும் முன்னே என்னை தங்கி கொண்டவர் முதல்வர், அவரிடம் ஒன்று கேட்கிறேன்.  நான் உங்களிடம் அடைக்கலம் கேட்டு வந்தேன், எனக்கு அடைக்கலமும் தந்தீர்கள். என்னை உங்கள் படைக்கலனாகவும் ஏற்றுக்கொண்டீர்கள், என் பொதுவாழ்வில் புதுவாழ்வு தந்த முதல்வர் நீங்கள். நான் கேட்டதையும் கேட்காததையும் தந்தவர் நீங்கள். இன்னும் முதல்வரிடம் ஒன்றே ஒன்று கேட்கப்போகிறேன். இயற்கை என்னை இறுதியாக அழைக்கின்ற போது உங்கள் பூ விழி கண்ணில் இருந்து ஒரு துளி கண்ணீர் என் உடல் மீது சிந்த வேண்டும்", என உணர்ச்சி பெருக்கோடு பேசினார்.

சட்டமன்றத்தில் கேள்விகள் கேட்ட என்னை, பதிலுரை அளிக்கும் வாய்ப்பளித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்” என தெரிவித்தார்.