இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள், ஒரு கால பூஜை திட்டத்திலுள்ள திருக்கோயில் அர்ச்சகர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்களின் வருகை மற்றும் ஆய்வு விவரங்களை பதிவேற்றம் செய்திடும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 'HRCE' எனும் கைபேசி செயலியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “கிராம கோவில்களில் தினசரி பூஜை நடக்கிறதா என்று இந்த செயலி மூலமாக அறிந்து கொள்ள முடியும். ஆய்வுக்கு துறை அதிகாரிகள் செல்கின்றனரா என்பதையும் தெரிந்து கொள்ள உதவும். இந்த செயலி, துறை அலுவலர்களுக்கு முதலில் கொண்டு வரப்படுகிறது. தினசரி நடவடிக்கைகள் பதிவிடப்படவில்லை என்றால் தொடர்ந்து வலியுறுத்துவோம், மீறியும் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
எவையெல்லாம் சட்டவிரோதமோ, அதையெல்லாம் தீட்சிதர்கள் கையில் எடுத்துக் கொள்கிறார்கள். நகை சரிபார்ப்பு பணி மேற்கொள்ளும் போது தடுத்து நிறுத்தி... நீதிமன்றம் செல்வோம் என்றார்கள். நீதிமன்றத்திற்கு செல்வோம் என்று நிழல் பயம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். சிதம்பரம் நடராஜர் கோவிலில் பக்தர்கள் நலனுக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கையில் இருந்து துறை பின்வாங்கப் போவதில்லை.
இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு, மூடப்பட்ட 9 கோயில்கள் திறக்கப்பட்டுள்ளன. மதுரை கள்ளிக்குடி பாலகுருநாதர் சுவாமி கோயில் 12 வருடங்களுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளது. திராவிட மாடல் ஆட்சிக்கு எடுத்துக்காட்டாக கோவில் திறக்கப்பட்டுள்ளது... திருவண்ணாமலையில் உள்ள தென்குடியனார் கோவில் திறக்கப்பட்டுள்ளது.
திராவிட மாடல் ஆட்சியை பொறுத்த வரை அனைவரும் சமம். உயர்ந்தோர் தாழ்ந்தோர் நிலை இருக்கக்கூடாது என்பதுதான் எங்கள் நோக்கம். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சாதி ரீதியாக மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்திவிடாமல் இருப்பதற்காகவும், மூடப்பட்ட கோவில்களை திறப்பதற்காகவும் எனது தலைமையில் இன்று ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது.
வனத்துறை சட்டத்திற்கு உட்பட்டு, திருக்கோவிலில் ஒரு அங்கமாக யானை உள்ளது. சட்டத்திற்கு உட்பட்ட நடவடிக்கைகளை துறை எடுக்கும். யானைகளுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை மருத்துவம் பார்க்கப்பட்டு சரியான உணவு, நீச்சல், நடைபயிற்சி கொடுக்கப்படுகிறது. தமிழகத்தில் கோவில் யானைகள் பாதுகாப்பாக பராமரிக்கப்படுகிறது. ஆகம விதி என்பதை தாண்டி பக்தர்கள் எண்ணங்களுக்கு தான் முதலிடம். சட்டத்திற்கு உட்பட்டு தான் செயல்படுவோம்.
வரும் 7 ஆம் தேதி கபாலீஸ்வரர் திருமண மண்டபத்தில் முதலமைச்சர் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடக்க உள்ளது.