தமிழ்நாடு

மண்ணுக்குள் தோண்டி எடுக்கப்பட்ட தொன்மையான தூண்கள்: புதைத்தது யார்?

மண்ணுக்குள் தோண்டி எடுக்கப்பட்ட தொன்மையான தூண்கள்: புதைத்தது யார்?

webteam

சென்னையில் பெண் தொழிலதிபரின் கெஸ்ட் ஹவுஸில் இருந்து 2 தொன்மையான தூண்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த தூண்களை சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு காவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் மண்ணுக்குள் இருந்து தூண்களை தோண்டி எடுத்துள்ளனர். இந்த கெஸ்ட் ஹவுஸ் பெண் தொழிலதிபர் கிரண் என்பவருக்கு சொந்தமானது. கிரணும், தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ள தொழிலதிபர் ரன்வீர் ஷாவும் கூட்டாளிகள் என்று கூறப்படுகிறது. தொழிலதிபர் ரன்வீர் ஷாவுக்கு சொந்தமான 3 இடங்களில் சோதனை நடத்திய சிலை கடத்தல் தடுப்புப்பிரிவினர் இதுவரை சிலைகள், தூண்கள் உட்பட 244 தொன்மையான கலைப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். 

காவல்துறையினரின் சோதனை வளையத்துக்குள் நான்காவதாக கிரணின் கெஸ்ட் ஹவுஸ் சிக்கியுள்ளது. இங்கு சோதனை நடத்தச் சென்ற காவல்துறையினருக்கு முதலில் எதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும், கெஸ்ட் ஹவுஸை அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்தது காவல்துறை. கெஸ்ட் ஹவுஸை சுற்றி முளைத்திருந்த புற்கள் ரெடிமேடு என்பது ஆய்வில் தெரியவந்தது. 3 நாட்களுக்கு முன்னர் தூண்களை கொண்டு வந்து புதைத்துவிட்டு, ரெடிமேடு புற்களை பரப்பி வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

ரன்வீர் ஷாவுக்கு சொந்தமான இடங்களில் காவல்துறையினர் சோதனை நடத்திய பிறகு, அவரும் கிரணும் அடிக்கடி சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. அண்ணாசாலைக்கு அருகே உள்ள கிரணுக்கு சொந்தமான உணவகத்தில் இந்த சந்திப்புகள் நடந்ததாக தெரிகிறது. சந்திப்பு தொடர்பான சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டு விட்டதாகவும் சொல்லப்படுகிறது. சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டதில் காவல் ஆய்வாளர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிலைக்கடத்தல் வழக்கு விசாரணையில் மண்ணுக்கு மேலும் கீழுமிருந்து இன்னும் எத்தனை ரகசியங்கள் வெளிவரப் போகின்றதோ.