ஒவ்வொரு கட்சித் தலைவருக்கும் முதலமைச்சர் ஆக வேண்டும் என்பதே விருப்பமாக இருக்கும். அதை அவர்கள் பொது வெளிகளில் தெரிவிக்கும்போது, அதை ஆசையாக மட்டுமே பிறக் கட்சித் தலைவர்கள் கடந்து செல்வர். ஆனால், திருமாவளவன் முதலமைச்சராக வேண்டும் என அவரது கட்சியின் நிர்வாகிகள் சொன்னால் அடுத்த கணமே அது விவாதப்பொருளாக மாறியுள்ளது.
‘ஆட்சியில் பங்கு - அதிகாரத்தில் பங்கு’ என விசிக தலைவர் திருமாவளவன் பேசி இருந்தது சில வாரங்களுக்கு முன்னர் விவாதத்திற்கு உள்ளானது. “நேற்று வந்தவர்கள் துணை முதலமைச்சர் ஆவதாகக் கூறுகிறார்கள். எங்கள் தலைவர் ஏன் இதுவரை ஆகவில்லை?” என அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா கேள்வி எழுப்பியதும் விவாதத்திற்கு உள்ளானது. தற்போது மீண்டும் திருமாவளவன் - முதலமைச்சர் விவகாரம் விவாதமாகியுள்ளது.
புதிய தலைமுறை டிஜிட்டலுக்கான ஸ்டாரும் சோறும் நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “விசிக தலைவர் திருமாவளவன் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வர வேண்டும் என்பதே எங்கள் கனவு” என தெரிவித்திருந்தார்.
மேலும் பேசிய அவர், “சாதி ஒழிப்பு, தமிழ் தேசியம், பெண் விடுதலை, வர்க்க பேத ஒழிப்பு, ஏகாதிபத்திய ஒழிப்பு - இவையாவும் எங்கள் கட்சியின் கொள்கைகள். இதுதான் எங்கள் இலக்கு என்றுகூட சொல்லலாம். விசிகவின் கனவே எங்கள் தலைவர் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பதுதான். ஆம், அவர் முதலமைச்சராக வரவேண்டும்” என தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பேசுகையில், “அருந்ததியர் இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிற திருமாவளவன் எப்படி ஒரு பட்டியலின மக்கள் தலைவராக இருக்க முடியும்? இவர் எப்படி ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் தலைவராக இருக்க முடியும்? சமூகநீதியைப் பற்றி பேசுவதற்கு அவருக்கு எந்த அருகதையும் கிடையாது. சமூக நீதி என்றால் கடைக்கோடியில் இருக்கும் பட்டியலின மக்களுக்கும் இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதுதான் அம்பேத்கர் அவர்களது கோரிக்கை எண்ணம்.
அதற்காகத்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இடஒதுக்கீட்டையே கொண்டுவந்தார். அந்த இடஒதுக்கீட்டையே நீர்த்துப் போகச் செய்யும் அளவிற்கான செயலை செய்து கொண்டிருப்பவர் திருமாவளவன். எனவே திருமாவளவன் முதலமைச்சர் ஆவதற்கான கனவெல்லாம் நடக்காது” என தெரிவித்தார்.
இதற்கு கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அவர் கூறியதாவது, “நீங்கள் மத்திய அமைச்சராக இரு முறை ஆகும்போது, என் அண்ணன் அவர் நிலத்தில் முதலமைச்சராக ஆகக்கூடாதா? இதை சொல்வதற்கு நீங்கள் யார்? அவரை எப்பாடுபட்டாவது முதலமைச்சர் ஆக்குவோம்.. அப்போது என்ன செய்வீர்கள்..” என தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் எல்.முருகன் கருத்துக்கு விசிக பொதுச்செயலாளர் வன்னி அரசும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “அருந்ததியர் உள் ஒதுக்கீடு சட்டத்தை 2009 ஆம் ஆண்டு கொண்டு வந்த போது விடுதலைச் சிறுத்தைகள் ஆதரித்தாக சுட்டிக்காட்டியுள்ளார். உள் ஒதுக்கீடு என்ற பெயரில் க்ரீமி-லேயேர் மூலம் சமூகநீதியை அழிக்க பாஜக முயற்சிக்கிறது” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் “இட ஒதுக்கீட்டில் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பது நாட்டுகே தெரியும் ”என கூறியுள்ள அவர், “புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளும் எதிர்க்கும் போது விடுதலைச் சிறுத்தைகளை மட்டும் தாக்குவது ஏன்? விடுதலைச் சிறுத்தைகள் ஒருநாள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தே தீரும், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுக்க பாஜகவை அகற்றுவதுதான் எமது இலக்கு” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறுகையில், “எங்க கட்சித் தலைவர்தான் முதலமைச்சர் ஆக வேண்டுமென சொல்வார்கள். நிறைய பேர் சொல்கிறார்கள். அதை முடிவு செய்ய வேண்டியது மக்கள். அதிக இடங்களில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள்தான் வர முடியும். ஒவ்வொரு கட்சியில் இருப்பவர்களும் தங்களது விருப்பத்தை சொல்வார்கள். அதற்கெல்லாம் நாம் முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது” என தெரிவித்துள்ளார்.