தமிழ்நாடு

தமிழகத் தலைவர்கள் பகைமையை ஊட்டுகிறார்கள் என்பதா? -  சீமான் கண்டனம்

தமிழகத் தலைவர்கள் பகைமையை ஊட்டுகிறார்கள் என்பதா? -  சீமான் கண்டனம்

webteam

ஈழ நிலத்தில் இரண்டு இலட்சம் தமிழர்களைக் கொன்றொழித்து, இனப்படுகொலையை அரங்கேற்றிவிட்டு தமிழகத் தலைவர்கள் இரு இனங்களிடையே பகைமையை ஊட்டுகிறார்கள் என்பதா என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழர், சிங்களர் எனும் இரு இனங்களிடையே தமிழக அரசியல் தலைவர்கள் பகைமையையும், துவேசத்தையும் உண்டாக்குவதாக மகிந்தா ராஜபக்சவின் மகனும், இலங்கை பாராளுமன்ற உறுப்பினருமான நமல் ராஜபக்ச கூறியிருப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது. இரண்டு இலட்சம் தமிழர்களைக் கொன்றொழித்த இனப் படுகொலையாளர் மகிந்த ராஜபக்சவின் மகன் சமாதானத்தையும், அமைதியையும் பற்றி நமக்குப் பாடமெடுப்பது நகைப்புக்குரியது. தமிழினப் படுகொலையைத் திட்டமிட்டு நடத்தி இரண்டு இலட்சம் தமிழர்களைக் கொன்றொழித்த மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச அதிபராகப் பொறுப்பேற்றிருப்பது தமிழர்களுக்கு ஒரு இருண்ட காலமாகும். 

இந்த ஆட்சி மாற்றம் பெரும் அச்சுறுத்தலையும், கலக்கத்தையும் தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது என்றால், அது மிகையில்லை. ஒற்றை நாட்டில் ஒருமித்து சிங்களர்களோடு தமிழர்கள் இணைந்து வாழ்வது என்பது சாத்தியமே இல்லை என்கிற தமிழர்களின் மனநிலையைத்தான் நடந்து முடிந்திருக்கிற தேர்தல் பிரதிபலித்திருக்கிறது. இந்தியப் பேரரசு தார்மீகத்தோடு தமிழர்கள் பக்கம் நிற்க முன்வர வேண்டும். 

உலகத் தமிழர்களின் நெடுநாள் கோரிக்கையான ஈழ இனப்படுகொலைக்குத் தலையீடற்ற ஒரு பன்னாட்டுப் பொது விசாரணை மற்றும் அதனைத் தொடர்ந்து தனித் தமிழீழம் அமைவதற்கான ஒரு பொது வாக்கெடுப்பு ஆகியவைகள் நடத்தப்படுவதற்கான ஒரு சூழலை இந்திய அரசும், பன்னாட்டுச் சமூகமும் ஏற்படுத்தித் துயருற்று இருக்கிற தமிழர் வாழ்வில் விடிவை ஏற்படுத்தித்தர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்'' என தெரிவித்துள்ளார்