விஜய் - சீமான் புதிய தலைமுறை
தமிழ்நாடு

“விஜய்யின் திராவிடம், தமிழ் தேசியம் கொள்கைகளோடு ஒத்துப் போகவில்லை” – சீமான்!

“விஜய்யின் திராவிடம், தமிழ் தேசியம் கொள்கைகளோடு ஒத்துப் போகவில்லை. நான் தனித்துதான் போட்டியிடுவேன்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

PT WEB

செய்தியாளர்: மணிகண்டபிரபு

மதுரை கோ.புதூர் காந்திபுரம் பகுதியில் மழை பாதிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைபாளர் சீமான் நிவாரண உதவி பொருட்களை வழங்கினார். முன்னதாக பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து நிவாரணப் பொருட்கள் வழங்கும் போது மக்கள் அதனை வாங்க முண்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சீமான்

இதைத் தொடர்ந்து சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்....

“என்னுடைய கொள்கையும் விஜய்யின் கொள்கையும் ஒத்துப் போகவில்லை. திராவிடமும் தமிழ் தேசியமும் இரு கண்கள் என விஜய் கூறியிருப்பது எங்கள் கொள்கைகளுக்கு எதிரானது, நேர்மாறானது. திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று என விஜய் கூறினால் அது தவறானது. என்டிஆர் தெலுங்கு தேசம் என உருவாக்கிய போது எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. ஆனால் தமிழ் தேசம் என கூறப்பட்ட நிலையில், அது பாசிசம் என பலவாறாக அர்த்தம் கற்பிக்கப்பட்டது.

“என் பயணம் என் கால்களை நம்பித்தான்”

பெரியாரை ஏற்கும் போது திராவிடத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். இதையேதான் திமுகவும் செய்கிறது. ஆனால் நாங்கள் திராவிட மாடலை திருட்டு மாடல் என சொல்கிறோம். ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பது நீண்ட கால கோரிக்கை. இதை நான் ஏற்கனவே பேசியவன். என் பயணம் என் கால்களை நம்பித்தான். யார் காலையும் நம்பி பயணிக்காதவன் நான். திராவிடம் என்பது சமஸ்கிருதம்; மாடல் என்பது ஆங்கிலம் இது என்ன மாடல். தமிழராட்சி தமிழ்நாடு என்று பேச முடியவில்லை.

சீமான்

“விஜய் வெற்றிபெற்று நிலைப்பதை காலம்தான் தீர்மானிக்க வேண்டும்”

நான் திருப்பத்தூர் போக வேண்டுமென்றால் திருப்பூர் நோக்கி பயணிக்க முடியாது. என் பாதை என் இலக்கு என் பயணம் என்பது எனக்குதான் தெரியும். என் கனவு எனக்கானதல்ல; எனது முன்னோர்கள் வகுத்த கனவை என் கனவாக கொண்டு செயல்பட்டுள்ளேன். நான் தனித்துப் போட்டியிடுவேன் என சொல்லிவிட்டேன். என் பயணம் உறுதியானது. நிலைத்தது. விஜய் வெற்றி பெறுவது நிலைப்பது என்பதை காலம்தான் தீர்மானிக்க வேண்டும். அதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

“பகுத்தறிவுக்குள்தான் கடவுள் மறுப்பு கொள்கையே இருக்கிறது”

நான் ஒரு இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறேன். தம்பி விஜய் புதிதாக வந்திருக்கிறார். அவரை தட்டிக் கொடுக்க வேண்டும். வாழ்த்துகிறேன். பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையை தாங்கள் ஏற்கவில்லை என்றும் பகுத்தறிவை ஏற்கிறேன் என்றும் விஜய் கூறுகிறார். பகுத்தறிவுக்குள்தான் கடவுள் மறுப்பு கொள்கையே இருக்கிறது. பெரியார் பெண்ணுரிமையை போதிக்கவில்லை. எங்கள் முன்னவர்களின் முன்னுரிமையே பெண்ணுரிமையாகதான் இருந்தது.

“முதலமைச்சர் ஆவது என் லட்சியம் இல்லை”

யாரோடும் கூட்டணி இல்லை. முதலமைச்சர் ஆவது என் லட்சியம் இல்லை. முதலமைச்சராகி என்னென்ன செய்ய வேண்டும் என்பதே என் லட்சியம். நான் 50 சீட்டுகள் பெற்று முதலமைச்சராகி சம்பாதிக்க வேண்டும் என நினைப்பவன் அல்ல. நான் வியாபாரம் செய்ய வந்தவன் அல்ல” என்றார்.

அப்போது அவரிடம் ‘2026 தேர்தல் விஜய் v/s உதயநிதி - விஜய் v/s ஸ்டாலின் என மாறுமா’ என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்கவே, அதற்கு அவர், “நாங்கள் எல்லாம் என்ன விளையாடிக் கொண்டிருப்போமா?” என பதில் அளித்தார்.

மேலும், “விஜய்-யைப் பார்த்து யாரும் பயப்பட மாட்டார்கள். என்னை பார்த்து பயப்படுவார்கள். காரணம் நான், இந்தியன் திராவிடம் எனும் இரண்டு கோட்பாட்டையும் எதிர்ப்பவன்” என்று சீமான் தெரிவித்தார்.