seeman and rn ravi file image
தமிழ்நாடு

ஆளுநரின் அவதூறு குண்டுகளால் வெறுப்பாகிப்போனவர்கள் பெட்ரோல் குண்டு வீசியிருக்கலாம் - சீமான்

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியவருக்கும், திமுகவினருக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை. ஆளுநர் ஒவ்வொரு நாளும் ஏதாவது அவதூறு குண்டுகளை வீசியதால் வெறுப்பாகி போனவர்க.ள் பெட்ரோல் குண்டை வீசி இருக்கலாம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

யுவபுருஷ்

சிவகங்கை மாவட்டத்தில் காளையார் கோவிலில் நடைபெற்ற மருதுபாண்டியர்கள் குரு பூஜையில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, “ஆளுநர் அரசியல் பேசியதாலும், தினமும் அவதூறு குண்டை வீசியதாலும் வெறுப்பாகி போனவர்கள் பெட்ரோல் குண்டை வீசி இருக்கலாம்.

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியவருக்கும், திமுகவினருக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை. யாரோ ஒருவர் எறிந்திருக்கலாம். ஆளுநர் அவரது வேலையை மட்டும் செய்ய வேண்டும். இதற்கு முன்பாக இருந்த ஆளுநர்கள் வீடுகளில் குண்டுகள் வீசப்பட்டதா?” என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, “தேவையில்லாத வரலாற்றுத் திரிபு செய்திகளை ஆளுநர் சொல்லி வருகிறார். இங்கு அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு தமிழனும் அறிவுத் தெளிவும், அரசியல் புரிதலும் கொண்டிருக்கிறார்கள். தன்னோட இன வரலாற்றை வாசித்து, நேசித்து வருபவர்கள். என்னைத்தாயவது வாய்க்கு வந்தபடி ஆளுநர் பேசக்கூடாது. ஆளுநரின் தொடர் பேச்சுக்களால், ஏற்பட்ட வெறுப்பில் அந்த நபர் பெட்ரோல் குண்டை வீசி இருக்கலாம்” என்றார்.