சீமான், கருணாநிதி pt web
தமிழ்நாடு

“அரசு நலத் திட்டங்களுக்கு கருணாநிதி பெயரை மட்டுமே வைப்பது ஏன்?” - சீமான் மீண்டும் கேள்வி!

“அரசு நலத்திட்டங்களுக்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயர்தான் சூட்ட வேண்டுமா? ஏன் எங்கள் முன்னோர்கள் யாரும் இல்லையா” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

PT WEB

செய்தியாளர்: சுமன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்....

“பஸ் நிலையம், பன்னாட்டு நிறுவனங்களுக்கு கருணாநிதி பெயர்தான் வைக்கப்படுகிறது”

“அரசு நலத்திட்டங்களுக்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயர்தான் சூட்ட வேண்டுமா? ஏன் எங்கள் முன்னோர்கள் யாரும் இல்லையா? குமரி மண்ணிலேயே நேசமணி, ஜீவானந்தம் இருந்தனர். கப்பலோட்டிய தமிழனை தாண்டி ஒரு தியாகி உள்ளாரா? ஆனால், மக்கள் வரிப் பணத்தில் கட்டப்படும் பஸ் நிலையம், பன்னாட்டு நிறுவனங்களுக்கு கருணாநிதி பெயர்தான் வைக்கப்படுகின்றன. ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க காசு இல்லை. பழைய ஓய்வூதிய திட்டத்தை கொடுக்க முடியாது என்று கூறுகிறார்கள். கேட்டால் பணம் இல்லை என்று சொல்கிறார்கள்.

ஸ்டெர்லைட் ஆலை

“ஸ்டெர்லைட் போன்ற நச்சு ஆலைகள் கொண்டுவரும்போது ஆட்சியில் இருந்தவர்கள் யார்?”

80 ஆண்டுகாலம் தமிழர்களுக்காக உழைத்தேன் என்கிறார்கள். ஆனால், தமிழர்களை வைத்து பிழைத்துள்ளார்கள். காவிரி நதிநீர் உரிமை, கச்சத்தீவு, கல்வி, மருத்துவம் மாநில பட்டியலில் இருந்து பொதுபட்டியலுக்கு சென்றபோதெல்லாம் யார் ஆட்சியில் இருந்தவர்கள். ஸ்டெர்லைட் போன்ற நச்சு ஆலைகள் கொண்டுவரும்போது ஆட்சியில் இருந்தவர்கள் யார். ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே ரேஷன்கார்டு திட்டங்கள் வரும்போதெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தது யார். திட்டமிட்டு செய்ததெல்லாம் வஞ்சகமும், துரோகமும்தான்.

“காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என சொல்ல ஏன் துணிவு இல்லை?”

சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க இவர்களுக்கு துணிவு இல்லை. காவிரியில் ஒரு சொட்டு தண்ணீர் தர முடியாது என்று சித்தராமையாவும் துணை முதல்வர் சிவக்குமாரும் கூறுகிறார்கள். ஆனால், அந்தக் கட்சியின் வெற்றிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சென்று பிரசாரம் செய்து, வாக்கு சேகரித்துள்ளார். காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என சொல்ல ஏன் துணிவு இல்லை. காங்கிரஸுக்கு பத்து சீட் கொடுத்து வெற்றிபெற வைத்துள்ளீர்கள். 850 தமிழ் மீனவர்களை சிங்களர்கள் கடலில் சுட்டுக் கொன்றார்கள். அதை கேட்க துணிவில்லை.

சித்தராமையா, சிவக்குமார்

“டாஸ்மாக் விற்பனை ஏன் குறைந்தது என கலெக்டரே விவாதித்துள்ளார்”

நவீன தமிழகத்தை உருவாக்கிய சிற்பி என்று கருணாநிதியை கூறி வருகிறார்கள். எதில் சிற்பி? குடித்துவிட்டு மக்களை மதுபோதையில் விழுந்து கிடப்பதிலா? மக்களைப்பற்றி சிந்தித்தவர் ஏன் மதுக் கடையை திறந்தார்? அதன் பிறகு மூடவேண்டும் என இவர்களே கூறினார்கள். பிறகு ஏன் திறந்து வைத்துள்ளார்கள்? சேலத்தில் டாஸ்மாக் விற்பனை ஏன் குறைந்தது என கலெக்டரே விவாதித்துள்ளார். அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை ஏன் குறைந்தது, தேர்ச்சி விழுக்காடு ஏன் குறைந்தது என என்றாவது விவாதித்துள்ளீர்களா? ஆனால், மக்களைப் பற்றி சிந்திப்பதாக கூறுகிறீர்கள்.

“ஆயிரம் ரூபாய்க்கு கையேந்துவது புரட்சியா வறட்சியா”

60 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், படிக்கும் மாணவ மாணவிகளுக்கு 1000 ரூபாய் கொடுக்கிறார்கள். ஆயிரம் ரூபாய்க்கு கையேந்துவது புரட்சியா வறட்சியா? அதே சமயம் பணப் பிடித்ததை கொடுக்குமாறு போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். மதுக்கடையில் விற்பனையை அதிகரிக்க கூடுதல் ஷட்டர்கள் திறக்கிறார்கள். தீபாவளிக்கு விற்பனை செய்ய ஒவ்வொரு மதுக் கடைகளையும் விரிவாக்கம் செய்தார்கள். 3500 டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கதவு அமைக்கப்பட்டது.

“இஸ்லாமிய கைதிகளை ஏன் விடுதலை செய்யவில்லை?”

மேஜர் முகுந்த் வரதராஜன்

அமரன் சினிமா முகுந்த் என்ற வீரனின் வாழ்க்கையில் நடந்தகதை எடுத்துள்ளார்கள். அதை படமாக பர்த்தால் நேர்த்தியான படம். அத்துடன் அதை விட்டுவிட வேண்டும். அதுவே நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தில் தொழுகை நடத்திவிட்டு குண்டு வெடிப்பது போன்று காட்சி அமைத்திருந்தார். அதை எதிர்த்து நான் மட்டும்தான் குரல் கொடுத்தேன். அந்த படத்தை பார்த்துவிட்டு இஸ்லாமியர்களுக்காக நாங்கள்தான் நிற்கிறோம் எனக்கூறக் கூடாது. இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்ய எங்களுக்கு வாக்களியுங்கள் என தேர்தல் நேரத்தில் கேட்டார். ஆனால், அதை செய்யவில்லை.

“த.வெ.க-வுக்குச் செல்பவர்கள் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்களே கிடையாது”

‘நாம் தமிழர் கட்சியின் வாக்குகள் சிதறுகிறது... அது த.வெ.க-வுக்கு போகிறது’ என சிலர் சொல்கிறார்கள். த.வெ.க-வுக்குச் செல்பவர்கள் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களே கிடையாது. அது சில பைத்தியங்களின் புலம்பல். ஜெயலலிதா, கலைஞர் இருந்தபோதே கட்சி ஆரம்பித்தவன் நான். என்னை விரும்புகிற மக்கள், பொழுதுபோக்குத் தளத்தில் தலைவனை தேடியவர்கள் அல்ல” என கூறினார்.