Seeman pt desk
தமிழ்நாடு

"திமுகதான் பாஜகவின் மெயின் டீம்"- சீமான் தாக்கு

webteam

செய்தியாளர்: சே.விவேகானந்தன்

தருமபுரி மாவட்டம் அரூரில் உலகப் பழங்குடியினர் தினத்தையொட்டி, நாம் தமிழர் கட்சி பழங்குடியினர் பாதுகாப்பு பாசறையின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது...

"நாம் தமிழர் கட்சி வளர்ந்து வருகிறது. நாங்கள் காசு கொடுத்து கூட்டத்தை கூட்டவில்லை. கோடிக்கணக்கில் பணத்தை கொடுத்து வாக்குகளை பெறவில்லை. ஒரு தேர்தலில் 17 லட்சம் வாக்குகள் பெற்றோம். அடுத்த தேர்தலில் 30 லட்சம், இந்த தேர்தலில் 35 லட்சம் வாக்குகளை பெற்றிருக்கின்றோம்.

NTK Public meeting

கல்லூரியில் படிக்கின்ற இளைஞர்களும், இளம்பெண்களும்தான் சீமானுக்கு வாக்களிக்கின்றனர். அவர்களின் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காகவே, இன்று தமிழ்ப் புதல்வன் திட்டம் தொடங்கி இருக்கிறார்கள். பெண்களுக்கு மகளிர் உரிமை திட்டம், கல்லூரியில் படிக்கும் இளம் பெண்களுக்கு புதுமைப்பெண் திட்டம், இன்று இளைஞர்களுக்கு தமிழ்ப் புதல்வன் திட்டம். இதன் மூலம் எல்லோருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கி சீமானுக்கு விழுகின்ற வாக்குகளை பெற வேண்டும் என திமுக அரசு திட்டங்களை வகுத்து வருகிறது. இந்த அரசை ஆயிரம் ரூபாய் அரசு என்றுதான் சொல்ல வேண்டும்.

திராவிட மாடல் அரசு என்று சொல்கின்றார்கள். ஏன் தமிழ்ப் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், மகளிர் உரிமைத் தொகை திட்டம் என பெயர் வைக்கிறார்கள். முடிந்தால், திராவிட புதல்வன் திட்டம், திராவிட மகளிர் உரிமைத் திட்டம் என பெயர் வையுங்கள் பார்க்கலாம்.

நாம் தமிழர் கட்சியை, பாஜகவின் பி டீம் என சொல்கிறார்கள். கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு நாணயம் வெளியிடப் போகிறார்கள். அதனை ராஜ்நாத் சிங் வெளியிடப் போகிறார். அப்பொழுது இந்த மெயின் டீம் மேடையில் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்க்கலாம். எல்லோரும் அப்பொழுது தலை குனிந்து நிற்பார்கள். திமுகதான் பாஜகவின் மெயின் டீம்" என்று சீமான் தெரிவித்தார்.