”2026 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். தற்போது 60 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளேன். மற்ற தொகுதி வேட்பாளர்களையும் தேர்வு செய்து வருகிறேன்’’ என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்துத் தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் அவர் கூட்டணி வைக்கப் போகிறார் என செய்திகள் வெளியான நிலையில், இப்படி ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கிறார் சீமான்..,அதன் பின்னணி என்ன?
நாம் தமிழர் கட்சி கடந்த 2016 முதல் படிப்படியாக வளர்ச்சி கண்டுள்ளது.
2009-ல் இயக்கமாக தொடங்கப்பட்ட நாம் தமிழர், 2010-ல் கட்சியாக மாற்றப்பட்டது. முதல்முறையாக 2016 சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் தனித்துப் போட்டியிட்டு ஒரு சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றது. தொடர்ந்து 2019 தேர்தலில் மீண்டும் தனித்துக் களமிறங்கி, 3.67 சதவிகித வாக்குகளைப் பெற்றது அந்தக் கட்சி. வேட்பாளர்களில் ஐம்பது சதவிகிதம் அதாவது 20 பெண் வேட்பாளரார்களை களமிறக்கினார் சீமான். தொடர்ந்து, 2021 சட்டமன்றத் தேர்தலில், மீண்டும் தனித்துக் களமிறங்கி, 6.8 சதவிகித வாக்குகளைப் பெற்றது.
வாக்கு சதவிகிதம் அதிகரித்தாலும் இன்னும் வெற்றிக் கணக்கை துவங்கவில்லை:
கடைசியாக, தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்டு, எட்டு சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றதோடு, அங்கீகாரம் பெற்ற மாநிலக் கட்சியாகவும் மாறியிருக்கிறது. ஆனால், இரண்டு சட்டமன்றத் தேர்தல், இரண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, வாக்கு சதவிகிதம் படிப்படியாக உயர்ந்தாலும் வெற்றிக்கணக்கை இன்னும் தொடங்கவில்லை. அதனால், இனிவரும் காலங்களில் சீமான் கூட்டணி செல்ல முடிவெடுத்துவிட்டார் என நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தகவல்கள் வெளியாகின..,அதற்கு ஏற்றார்போல, விஜய்யின் அரசியல் வருகை குறித்தும், அவருடன் கூட்டணி வைப்பீர்களா? எனக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் சீமான் பாஸிட்டிவ்வான பதில்களையே தெரிவித்திருந்தார்.
தவெக உடன் நாம் தமிழர் கட்சி கூட்டணியா?
விஜய்யின் கொள்கைகளும் நாம் தமிழரின் கொள்கைகளும் 100 சதவிகிதம் ஒத்துப் போகின்றன.. தவெகவுடன் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது என்று நாம் தமிழர் நிர்வாகிகள் ஊடகங்களில் கருத்துத் தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த சீமானிடம், தவெகவுடன் கூட்டணி உறுதியாகிவிட்டதா என நிருபர் ஒருவர் கேட்க, நான் தனிச்சுப் போட்டியிட்றேன்..,2026-ல தேர்தலுக்கு 60 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை போட்டு விட்டேன்’’ என சீமான் பதிலளித்தார். தவெகவுடன் நாம் தமிழர் கூட்டணி என செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், சீமானின் இந்த முடிவுக்கு காரணம் என்ன?
”விஜய்யுடன் கூட்டணி என சீமான் தரப்பில் இருந்துதான் பாஸிட்டிவான கருத்துகள் வந்தன. தவிர, விஜய் தரப்பில் இருந்து இன்னும் கிரீன் சிக்னல் வரவில்லை. இன்னும் சொல்லப்போனால் அதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரியவில்லை. அதனாலேயே சீமான் இந்த முடிவை எடுத்திருக்கிறார்’’ என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
தவெக தனித்து நின்றால் நாம் தமிழர் கட்சியை விட அதிக வாக்குகளை பெறும் - பத்திரிகையாளர் பிரியன்
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து, மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் பேசினோம்.., ஆப்போது அவர், சீமானை பொறுத்தவரை 1 சதவிகிதத்திலிருந்து எட்டு சதவிகிதமாக அவரின் வாக்குவங்கி அதிகரித்து வந்திருக்கிறது...தமிழ்த்தேசியம் எனும் கொள்கையை முன்னிறுத்தி, இளைஞர்களைக் கவர்ந்து இந்த வாக்குகளை பெற்றிருக்கிறார். நாம் தமிழரில் இருந்தே பலர் விஜய் கட்சிக்கு செல்ல வாய்ப்பிருக்கிறது. தவிர, கூட்டணி அமைந்தால், யார் தலைமை தாங்குவது என்கிற கேள்வி முன்னிருக்கிறது. அரசியல் என்று பார்த்தால் சீமான் சீனியர்தான்.
ஆனால், தனியாக நின்றால் நாம் தமிழரை விட விஜய் அதிகமான வாக்குகளை பெற வாய்ப்பிருக்கிறது. கூட்டணி அமைந்தால் நாங்கள்தான் முதன்மை சக்தியாக இருப்போம் என தவெக சார்ந்து பேசுபவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். அதாவது, முதல்வர் வேட்பாளராக இருப்போம் என பேசுகிறார்கள். அதை சீமான் விட்டுக் கொடுக்கமாட்டார். தவிர, சீமான் அருந்ததியர்களை விமர்சித்துப் பேசுகிறார்.., ஆனால், விஜய் அனைவருடைய வாக்குகளையும் வாங்க வேண்டும் என நினைக்கிறார். அதனால், சீமானோடு கூட்டணி வைக்க விஜய் யோசிக்கலாம். சேரவேண்டிய அவசியமும் இல்லை என்கிறார்.
நாங்கள் சீனியர்கள். எங்களுடன் வரவேண்டும் என்றால் விஜய்தான் முடிவு செய்ய வேண்டும் - ஸ்ரீதர்
இந்த கருத்துகள் குறித்து, நாம் தமிழர் கட்சியின் மத்திய சென்னை மண்டலப் பொறுப்பாளர் வழக்கறிஞர் ஸ்ரீதரிடம் பேசினோம். ”நாம் தமிழர் - விஜய் கூட்டணி குறித்து வந்த செய்திகள் எல்லாமே ஹேஸ்யங்கள். அண்ணன் சீமான் இதுவரை தானாக முன்வந்து விஜய்யுடன் கூட்டணி செல்ல விரும்புகிறோம் என கருத்துத் தெரிவித்ததில்லை. அரசியலைப் பொறுத்தவரை நாங்கள் சீனியர்கள். எங்களுடன் வரவேண்டும் என்றால் விஜய்தான் முடிவு செய்ய வேண்டும் என்றுதான் அண்ணன் கருத்துத் தெரிவித்தார். அவர்கள் விரும்பினால் சேருவோம் என்றுதான் சொல்லியிருந்தோம். இப்போதும், புதிய ஆற்றல்கள், தமிழ்த் தேசியத்துக்கு எதிரான கொள்கைகள் இல்லாத கட்சிகளுடன் கூட்டணி வைக்க அண்ணன் விரும்பதான் செய்வார். ஆனால், அண்ணனாக போய் அவர்களிடம் பேசமாட்டார்’’ என்றார்.