சவுக்கு சங்கர், சீமான், விஜய் pt web
தமிழ்நாடு

சவுக்கு சங்கர் மீது குண்டர்சட்டம்.. “கேவலமான அரசியல் பழிவாங்கல்; தவெக மாநாடு...” - சீமான்

“என் தம்பிகளின் வாக்குகளை கவர்வதற்காக தமிழ்ப் புதல்வன் என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளனர்” என சிவகங்கையில் சீமான் தெரிவித்துள்ளார்.

PT WEB

செய்தியாளர் - R. செளந்திரநாதன்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நெல்முடிக்கரையில் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் சந்திரசேகரன் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நடிகர்கள் அரசியல் கட்சி துவங்கும் போது விமர்சனம் வரத்தான் செய்யும். MGR, ஜெயலலிதா இந்த விமர்சனங்களை தாண்டித்தான் கட்சியினை அமைத்தார்கள். நான் கட்சி ஆரம்பித்த போது பல கொடுமைகளை அனுபவித்துள்ளேன். விஜய் நடத்தும் மாநாட்டின் இட உரிமையாளர்களை மிரட்டுவது ஜனநாயகமா? தமிழக அரசு கொடுங்கோன்மையாக நடந்து கொள்கிறது.

சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டது, கொடுஞ்செயல். இது கேவலமான, அசிங்கமான அரசியல் பழிவாங்கல். சாராயத்தை அரசே விற்கும் போது, பள்ளி மாணவர்கள் முன் போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுப்பது வேடிக்கையானது.

என் தம்பிகளின் வாக்குகளை கவர்வதற்காக தமிழ்ப் புதல்வன் என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளனர். எல்லா மாநிலங்களிலும் கள்ளு உணவாக இருக்கும் போது, தமிழகத்தில் மதுவாக இருப்பதற்கு, ஆட்சியாளர்களிடம் மது ஆலை உள்ளதே காரணம். ஆதிதிராவிடர் தமிழக முதல்வராக வர முடியாது என்ற திருமாவளவன் கருத்தை ஆதரிக்கின்றேன். ஆனால் திமுகவின் மீது நம்பிக்கை உள்ளது என்பதை மறுக்கின்றேன்.

முதல்வர் வீட்டில் இருந்து மட்டும்தான் துணை முதல்வர் வரமுடியுமா? நாட்டில் இருந்து வரமுடியாதா? ஆதித் தமிழ்க் குடிகளை மதிப்பதற்கு பதில், மிதிக்கும் பெரும் கொடுமை இங்கு நடந்து வருகிறது. அது மாறனும். அது சட்டம் போட்டு திட்டம் போட்டெல்லாம் மாற்ற முடியாது. உளவியல் ரீதியாக மாற வேண்டும். புதிய தலைமுறை உருவாகி வருகிறது. அது அதனை மாற்றும்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

துணை முதல்வராக உதயநிதி வந்தால், வரவேற்போம், வாழ்த்துவோம். வேறு என்ன செய்ய முடியும்? கருணாநிதி என்ற கங்காரு தனது குட்டியை முதல்வராக ஆக்கியது போல, ஸ்டாலின் என்ற கங்காரு தனது குட்டியை பதவிக்கு கொண்டு வருவார். இதனை சகித்துக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம்” என சீமான் தெரிவித்தார்.