நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் புதிய தலைமுறை
தமிழ்நாடு

RIP VIJAYAKANTH | “அவர் உடல் நலத்துடன் இருந்திருந்தால்” உருக்கமாக பேசிய சீமான்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மறைவுக்கு தனது இரங்கலை பதிவு செய்துள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் ரசிகர்கள் என்று அனைத்து தரப்பு மக்களும் தங்களது இரங்கலை சமூக வலைதளங்கள் வாயிலாகவும், காணொளிகள் வாயிலாகவும் பதிவு செய்து வருகின்றனர்.

அந்தவகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜயகாந்த் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

பின் செய்தியாளர்களை சந்தித்த சீமான், “விஜயகாந்த் என்றாலே அச்சமின்மையும் துணிவும்தான். தூரமாக நின்று பார்க்கும் போது அவரை போல நடிப்பதற்கும் சண்டையிடுவதற்கும் ஆட்கள் நிறைய வரலாம். ஆனால் அவரை போல சிறந்த மனிதர் ஒருவர் வரவே முடியாது.

திரையுலகில் இருந்து கொண்டு புகழின் உச்சிக்கு சென்றாலும் அது தலையில் ஏறாமல் பார்த்துக் கொண்டார். எல்லோரோடும் சமமாக பழகும் மனிதர் ஒருவர் இருந்தார் என்றால் அது அவர்தான். அதனால் அவர் என்ன கூறினாலும் அனைவரும் அதை கேட்பர். அதற்கு காரணம் அவர் எல்லோரிடமும் பாசத்தோடும் நேசத்தோடும் வாழ்ந்தார்.

அவரின் இழப்பு என்பது தேற்றி கொள்ளமுடியாத ஒரு இழப்பு. அவர் இந்நேரம் அரசியலில் இருந்திருந்தால் தமிழ்நாட்டின் அரசியல் போக்கே மாறி இருக்கும். அப்படி மாற்றியவர் அவர். அதற்கு மிகப்பெரிய துணிச்சல் வேண்டும். எதற்கும் பயப்படமாட்டர். கடுமையான உழைப்பாளி. வெயில், மழை, பசி, பட்டினி, உறக்கம் எதுவும் இல்லாமல் நடிப்பார் அந்த அர்ப்பணிப்பு தமிழ் திரையுலகில் எந்த நடிகருக்கும் இருக்காது.

அப்படிபட்ட கலைஞர். நல்ல மனிதர் என்று ஒரு வார்த்தையில் அடக்கி விட முடியாது . அதையெல்லாம் தாண்டி ஆக சிறந்த மனிதர். பெரிய பண்பாளர், எளிமையானவர். திரையில்தான் கம்பீரமாக தோற்றமளிப்பார். ஆனால் மனதளவில் அவர் ஒரு குழந்தை போன்றவர். இவர் இழப்பு பேரிழப்பு” என்றார்.