தமிழ்நாடு

”இந்திய வரலாற்று ஆய்வுக்குழுவில் இந்தி பேசாத மாநிலங்கள் புறக்கணிப்பு” சீமான் கண்டனம்

”இந்திய வரலாற்று ஆய்வுக்குழுவில் இந்தி பேசாத மாநிலங்கள் புறக்கணிப்பு” சீமான் கண்டனம்

webteam

இந்திய கலாச்சாரத் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்து பெரும் ஆய்வு செய்யத் திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள மத்திய அரசு, அக்குழுவில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள், மேற்குவங்கம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களின் பிரதிநிதிகளைச் சேர்க்காது முற்றாக புறக்கணித்திருப்பது பேரதிர்ச்சி அளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

"இது திட்டமிட்டு நடைபெற்ற மிகப்பெரு்ம சதி என்பதில் எவ்வித ஐயத்திற்கும் இடமில்லை. அக்குழுவில் இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்தவர்களில் ஒருவர்கூட இடம்பெறவில்லை என்பதன் மூலம் அது தெளிவாகிறது" என்று குறிப்பிட்டுள்ள சீமான், "இத்தோடு மதச் சிறுபான்மையினர்களோ, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களோ, பெண் ஆய்வறிஞர்களோ இடம்பெறவில்லை என்பதும் அதனை மெய்ப்பிக்கிறது" என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

"50 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட தொல்குடியான தமிழ்ப் பேரினத்தின் வரலாற்றை, தமிழ்மொழியின் தனித்துவமிக்க சிறப்பையும், அளப்பெரும் பெருமையையும், தமிழ் மண்ணின் செழுமைமிக்க மரபையும், பண்பாட்டையும் அழியாக, சிறிதும் தொடர்பற்ற ஒரு கூட்டம் வரலாற்றை எழுதுமாயின் அது தமிழர்களைச் சிறுமைப்படுத்தும் வரலாறாகவே அமையும் " என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே இந்திய ஒன்றியத்தின் கலாச்சாரத்தை ஆய்வு செய்யவுள்ள நிபுணர் குழுவினை திரும்பப் பெற்று, புதிதாகக் குழு அமைக்கவேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தியுள்ளார்.