தமிழ்நாடு

"முருகனின் பெரும் புகழ் இழிப்பரப்புரையால் குன்றிவிடாது" - சீமான் !

"முருகனின் பெரும் புகழ் இழிப்பரப்புரையால் குன்றிவிடாது" - சீமான் !

jagadeesh

உலகம் முழுவதும் ஓங்கி ஒலிக்கும் முப்பாட்டன் முருகனின் தனித்தன்மையும், பெரும்புகழும் எத்தகைய இழிபரப்புரையாலும் குன்றிவிடாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

‘கறுப்பர் கூட்டம்’ என்ற யூ-டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசத்தை இழிவுப்படுத்தும் விதமாக வீடியோ பதிவிடப்பட்டது. இதனையடுத்து இந்து மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கருத்துக்கள் பகிரப்படுவதாக பாஜக சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் "கறுப்பர் கூட்டம்" யூடியூப் சேனல் மீது புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் ‘கறுப்பர் கூட்டம்’ யூ-டியூப் சேனல் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இது தொடர்பாக ஒருவரை கைது செய்யப்பட்டும், மற்றொருவர் தானாக காவல் நிலையத்தில் சரணடைந்தார். இது குறித்து பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் " தமிழர்களின் ஐவகை திணை நிலங்களுள் முதன்மை நிலமாகத் திகழும் குறிஞ்சித்திணையின் தலைவன் மூத்தோன் முருகனை முப்பாட்டன் என அழைப்பதும், வணங்கி போற்றுவதும் தமிழரின் மரபு சார்ந்த தொடர்ச்சியான வழிபாட்டு முறையாகும்"

"தமிழர்களின் பெருத்தப் பண்பாட்டு அடையாளமாக இருக்கிற தமிழ் இறையோன் முருகனைக் கொச்சைப்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள அக்காணொளி ஒட்டுமொத்தத் தமிழர்கள் மீதும், தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்கள் மீதும் கல்லெறிகிற கயமைத்தனமாகும். வரலாற்றின் வீதிகளில் தொடர்ச்சியாக அடிமைப்படுத்தப்பட்டு, அழித்தொழிக்கப்பட்ட இனத்தின் மறைக்கப்பட்ட வீரவரலாற்றையும், பண்டைய அடையாளங்களையும் மீட்டெடுக்கும் பெரும்பணியைச் செய்ய வேண்டிய தருணத்தில், தமிழின முன்னோர்களை இழித்துரைத்துப் பரப்புரை செய்யும் செயல்கள் கருத்துரிமை வரம்பிற்கு அப்பாற்பட்டவையாகும்" என சீமான் தெரிவித்துள்ளார்.