தமிழ்நாடு

சுங்கக்கட்டணம் என்பது அங்கீகரிக்கப்பட்ட பகல் கொள்ளைதான் : சீமான்

சுங்கக்கட்டணம் என்பது அங்கீகரிக்கப்பட்ட பகல் கொள்ளைதான் : சீமான்

webteam

சுங்கச்சாவடிக் கட்டணத்தை உயர்த்தும் முடிவைக் கைவிட்டு, அடுத்த ஓராண்டிற்காவது சுங்கக்கட்டணம் வசூலிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரும் செப்டம்பர் 1 முதல் சுங்கச்சாவடிக் கட்டணங்கள் 10 விழுக்காடு அளவிற்கு உயர்த்தப்படலாம் என வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. கடந்த 5 மாதத்திற்கும் மேலாகத் தொடரும் ஊரடங்கினால் நாடு முழுமைக்கும் தொழில்கள், வேலைவாய்ப்பு என யாவும் பாதிக்கப்பட்டு மிகப்பெரும் பொருளாதார முடக்கமும், பணவீக்கமும் நிலவும் நிலையில் நடுத்தர வர்க்கத்தினரும், அடித்தட்டு உழைக்கும் மக்களும் பெரும் வருவாய் இழப்பைச் சந்தித்து, அத்தியாவசியத் தேவைகளுக்கே வழியற்று நிற்கையில், சுங்கச்சாவடிக் கட்டணம் உயர்த்தப்பட்டால் அது அவர்கள் தலை மீது விழும் பேரிடியாய் மாறும் என்பதில் ஐயமில்லை.

ஏற்கனவே பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள வாகன உரிமையாளர்கள் இந்தச் சுங்கச்சாவடி கட்டண உயர்வால் மேலும் பாதிப்படைவார்கள். போக்குவரத்துச் செலவு அதிகரிப்பால் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயர்ந்து ஏழ்மையிலும், வறுமையிலும் உழன்று கொண்டிருக்கும் அடித்தட்டு உழைக்கும் மக்களைப் பட்டினிச்சாவை நோக்கித் தள்ளும் கொடுங்கோல் நடவடிக்கையாகும்.

ஊரடங்கால் ஆறுமாதகாலமாக வசூல் செய்ய முடியாத கட்டணத்தொகையினை மொத்தமாக வசூலிக்க முயலும் தனியார் நிறுவனங்களின் இலாபவெறி வேட்டைக்கு மட்டும் அவசர அவசரமாக அரசு அனுமதியளிப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. சுங்கக்கட்டணம் என்பது அங்கீகரிக்கப்பட்ட பகற்கொள்ளைதான். அது முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என்பதே மக்களின் நீண்டநாள் கோரிக்கை எனும்போது, ஒவ்வொரு ஆண்டும் 10 முதல் 20 விழுக்காடு அளவுக்குச் சுங்கக்கட்டணம் தொடர்ச்சியாக உயர்த்தப்படுவது மக்கள் பணத்தைச் சூறையாடும் கோரச்செயலேயாகும். வசூல் செய்யப்படும் கட்டணக்கணக்கை குறைத்துக்காட்டி மிகப்பெரிய மோசடியில் சுங்கவசூல் செய்யும் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. வெளிப்படைத்தன்மையைச் சுங்கச்சாவடிகள் கடைப்பிடிக்காதவரை சுங்கக்கட்டணம் என்பது பகற்கொள்ளையாகத்தான் இருக்கும்.

சொந்த நாட்டிலேயே 50 கிலோ மீட்டருக்கு ஒருமுறை கட்டணம் செலுத்திப் பயணம் செய்வதென்பது ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில்கூட இல்லாத அடிமை நிலையாகும். ஆகவே, சுங்கச்சாவடிகள் எவ்விதக் கட்டண உயர்வையும் நடைமுறைப்படுத்த அனுமதிக்கக் கூடாது எனவும், தற்போதைய பொருளாதாரத் தேக்க நிலையைக் கருத்தில் கொண்டு அடுத்த ஓராண்டிற்குச் சுங்கக்கட்டண வசூலை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இதன்பிறகும் தனியார் நிறுவனங்களின் கட்டணக்கொள்ளைக்கு ஆதரவாகச் சுங்கச்சாவடிக் கட்டண உயர்வை அரசு அனுமதிக்குமாயின் தமிழகம் முழுவதும் சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக மூடக்கோரி மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.