இன்று அதிகாலையில் தமிழ்நாடு அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைதுசெய்தனர். இதுதொடர்பாக நாகர்கோவிலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை இன்று காலை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “கைது என்றால் நெஞ்சுவலி வருவதையெல்லாம் நிறைய தெலுங்கு படத்தில் பார்த்துள்ளோம். அப்படி என்றால் ஒவ்வொரு கைதிக்கும் நெஞ்சுவலி வர வேண்டும்” என்று கூறி அமைச்சர் செந்தில் பாலாஜி கைதை விமர்சித்தார்.
தொடர்ந்து தமிழ்நாடு அமைச்சரை கைது செய்ததற்கு மத்திய அரசுக்கு அவர் கண்டனம் தெரிவிக்கையில், “யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களது வசதிக்கு அதிகாரத்தை பயன்படுத்துகிறார்கள். தன்னாட்சி அமைப்புகள் ஆட்சியாளர்களின் 5 விரல்கள் போல் செயல்படுகிறது. இந்த அடக்குமுறை சர்வாதிகார ஆட்சி மட்டும் இல்லை, இது கொடுங்கோலாட்சி முறை.
தேர்தல் நெருங்க நெருங்க இதே போன்று பல வேலைகளை செய்வார்கள். செந்தில் பாலாஜி கைதென்பது எதிர்பார்த்தது தான். அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைதின் பின்னணியில் அதிமுக ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட ஊழல் இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்படியெனில் இது காலம் தாழ்ந்த நடவடிக்கை” என தெரிவித்தார்.
சீமானின் முழு பேட்டியை, இங்கே காணலாம்...