தமிழ்நாடு

வடகலை, தென்கலை பிரச்னை: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு பலத்த பாதுகாப்பு!

வடகலை, தென்கலை பிரச்னை: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு பலத்த பாதுகாப்பு!

webteam

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தில் வடகலை, தென்கலை பிரிவினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வரதராஜ பெருமாள் ஊர்வலம் போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் கடந்த மே 25-ம் தேதி தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருடசேவை நிகழ்ச்சி 29-ம் தேதி நடைபெற்றது. நம்மாழ்வார் அவதார நட்சத்திரத்தில் அவரது சந்நிதியில் பெருமாளை வைத்து தென்கலை பிரிவினர், பாசுரங்களை பாடி வழிபடுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் நம்மாழ்வார் சந்நிதியில் வைத்து பாசுரங்களை பாடினர். மறுநாள் அதிகாலையில் கருடசேவை நிகழ்ச்சிக்குச் சுவாமியை அலங்காரம் செய்ய வேண்டி உள்ளது என்று கூறி வடகலை பிரிவினர்  பாசுரங்களை பாடி முடிப்பதற்குள், சுவாமியை எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. 

இதனால் இரு பிரிவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கோயிலில் முக்கிய பிரமுகர்கள், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தலையிட்டு பிரச்சினையை சரி செய்தனர்.

இந் நிலையில் நாச்சியார் கோலத்தில் தங்கப் பல்லக்கில் வரதராஜ பெருமாள் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது தென்கலை பிரிவினர் பாசுரங்களை பாடியதாகத் தெரிகிறது. இதற்குக் கோயிலுக்குள்தான் இவர்கள் பாட வேண்டும் என்று வடகலை பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதனால் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே இருபிரிவினருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து டி.எஸ்.பி. முகிலன் தலைமையில் பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டனர். வருவாய் கோட்டாட்சியர் ராஜு, வட்டாட்சியர் நாகராஜன் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். கோயிலுக்குள் சென்று இப் பிரச்சினையை பேசிக் கொள்ளலாம் என்று தெரிவித்தனர். 

இதனைத் தொடர்ந்து தென்கலை பிரிவினர் ஒரு பிரிவாகவும், வடகலை பிரிவினர் ஒரு பிரிவாகவும் பிரிந்து சுவாமியுடன் ஊர்வலமாக பாசுரங் களையும், வேதமந்திரங்களையும் முழங்கியபடிச் சென்றனர். இவர்களுக்கு இடையில் பிரச்சினை ஏற்படாமல் இருக்க போலீாஸர் சென்றனர். இதனைத் தொடர்ந்து சுவாமி ஊர்வலம் அமைதியாக நடைபெற்று முடிந்தது