தமிழ்நாடு

போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்

போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்

Rasus

சென்னை விமான நிலையம் தற்போது போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற 6 பயங்கரவாதிகள் தமிழகத்தின் கோவை உட்பட சில இடங்களில் ஊடுருவியுள்ளதாகவும், அந்த 6 பேரில் ஒருவர் பாகிஸ்தான் பயங்கரவாதி என்றும் மற்ற 5 பேர் இலங்கையை சேர்ந்தவர்கள் என்று  மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் உள்ள விமானநிலையங்கள், முக்கிய ரயில் நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், பொதுமக்கள் அதிக அளவில் கூடும் வா்த்தக மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை விமானநிலையம் ஏற்கெனவே உச்சகட்ட பாதுகாப்பான ரெட் அலர்ட்டில் உள்ளது. அந்தப் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. விமான பயணிகள் அனைவருக்கும் கூடுதலாக ஒரு முழு பாதுகாப்பு சோதனை நடப்பதால், உள்நாட்டு பயணிகள் விமானம் புறப்படுவதற்கு ஒன்றரை மணி நேரம் முன்னதாகவும், சா்வதேச விமான பயணிகள் மூன்றரை மணி நேரம் முன்னதாகவும் கண்டிப்பாக விமானநிலையத்திற்கு வந்துவிட வேண்டும் என்று அந்தந்த விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இதைப்போல் சென்னைக்கு விமானத்தில் வரும் விவிஐபிகளை அழைத்து செல்ல வரும் கார்களையும் வெடிகுண்டு நிபுணா்கள் ஒரு தடவைக்கு 2 தடவை சோதனையிடுகின்றனா். அதைப்போல் புதுவை முதல்வா் நாராயணசாமி இன்று காலை 10.15 மணிக்கு டெல்லியிலிருந்து விமானத்தில் சென்னை வந்தார். அவர் காரில் ஏற வரும்போது பாதுகாப்பு அதிகாரிகள் மீண்டும் ஒருமுறை அவா் காரை சோதனையிட்டனா். இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் போலீசார் வழக்கமான சோதனை என்று சமாளித்தனா். நாராயணசாமியும் அவா்கள் கடமையை செய்கின்றனா் என்று கூறினார். சென்னை விமான நிலையம் தற்போது முழுக் காவல் கட்டுப்பாட்டில் உள்ளது.