தமிழ்நாடு

காவல்துறை கட்டுப்பாட்டில் பசும்பொன் கிராமம்: தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிப்பு

காவல்துறை கட்டுப்பாட்டில் பசும்பொன் கிராமம்: தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிப்பு

Rasus

அதிமுக பொருளாளர் குறித்த சர்ச்சைகளால் தங்க கவசத்தை யாரிடம் ஒப்படைப்பது என்ற குழப்பம் இன்று முடிவுக்கு வந்தது. இதையடுத்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, அதிமுக சார்பில் 13 கிலோ எடையுள்ள தங்‌க கவ‌சம், கிரிடத்தை பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு அளித்திருந்தார். மதுரை அண்ணாநகரில் உள்ள இந்தியன் வங்கியில் பாதுகாக்கப்பட்டு வரும் இந்த தங்க கவசம், அதிமுக பொருளாளரி‌டம் ஒப்படைக்கப்பட்டு குருபூஜை நாளில் தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்டு வந்தது. தற்போது கவசத்தை யாரிடம் ஒப்படைப்பது என்ற குழப்பமும், சர்ச்சையும் நீடித்த நிலையில், மாவட்ட ஆட்சியரிடம்
தங்க கவசம் இன்று ஒப்படைக்கப்பட்டது.

பசும்பொன் தேவர் சிலைக்கான தங்க கவசத்தை வைத்து பிரச்னை எழும்பக்கூடாது என்பதற்காகவே, மதுரை மாவட்ட ஆட்சியர் மூலம் எடுத்து செல்ல பரிந்துரைத்ததாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். இதையடுத்து இந்த கவசம் மதுரையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது. மதுரை மாவட்ட ஆட்சியர், ராமநாதபுரம் ஆட்சியரிடம் தங்க கவசத்தை ஒப்படைத்தார். அதனையடுத்து, தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. நாளை முதல் 30-ஆம் தேதிவரை தேவர் குருபூஜை நடைபெறவுள்ளதால் பசும்பொன் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.