தமிழ்நாடு

"என் சாவுக்கு திமுக கவுன்சிலர்தான் காரணம்" - கடிதம் எழுதிவைத்துவிட்டு செயலாளர் தற்கொலை!

"என் சாவுக்கு திமுக கவுன்சிலர்தான் காரணம்" - கடிதம் எழுதிவைத்துவிட்டு செயலாளர் தற்கொலை!

Sinekadhara

வேலூரில் ’’என் சாவுக்கு திமுக ஒன்றிய கவுன்சிலர்தான் காரணம்’’ என கடிதம் எழுதி வைத்துவிட்டு ஊராட்சி செயலாளர் தற்கொலை செய்துகொண்டார். திமுக கவுன்சிலரை கைது செய்யும்வரை உடலை வாங்க மறுத்து உயிரிழந்த ராஜசேகரின் மனைவி மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த இராமநாயினிகுப்பம் கிராம ஊராட்சி செயலாளராக அதே பகுதியைச் சேர்ந்த ராஜசேகர்(39) என்பவர் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இவர் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவரது மனைவி காந்திமதி (29) தனது தந்தை இறந்ததால் தாய்வீட்டுக்கு சென்றிருந்த நிலையில் நீண்ட நேரம் ஆகியும் ராஜசேகரனின் வீடு உள் பக்கம் பூட்டப்பட்டிருப்பதை அறிந்த பொதுமக்கள் இதுகுறித்து மனைவி காந்திமதிக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த காந்திமதி உறவினர்கள் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது ராஜசேகரன் தூக்கில் தொங்கியவாறு இறந்த நிலையில் இருந்துள்ளார்.

பின்னர் உயிரிழந்த ராஜசேகரன் எழுதிய கடிதம் ஒன்று இவர்களுக்கு கிடைத்துள்ளது. அக்கடிதத்தில், "மனைவி காந்திமதி என்னை மன்னித்துவிடு, நான் உன்னைவிட்டு போகிறேன். குழந்தையை பத்திராம பார்த்துக்கொள். எனது இந்த முடிவுக்கு கவுன்சிலர் அரிதான் காரணம். வேறு யாரும் காரணம் இல்லை. நீ ஏற்கெனவே உனது தந்தை இறந்த துக்கத்தில் இருக்கிறாய். மேலும் உனக்கு துன்பத்தை கொடுப்பதற்க்கு மன்னிக்கவும். உன்னைவிட்டு பிரிவது தாங்கமுடியவில்லை. நமது மகனை பத்திரமாக பார்த்துக்கொள்’’ என உருக்கமான வார்த்தைகளைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் யார் யாருக்கு தான் பணம் கொடுக்கவேண்டும் என்பதையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஊராட்சிக்கு வரும் நிதியை தனக்கு வழங்கவேண்டும் என கவுன்சிலர் அரி தொடர்து வற்புறுத்தி வந்ததாகவும், ராஜசேகரின் தம்பிக்கு ரேஷன் கடையில் வேலை வாங்கித்தருவதாக 2 1/2 லட்சம் பணம் பெற்ற கவுன்சிலர் அரி வேலை வாங்கித்தராமல் அலைக்கழித்ததாகவும், பணத்தை திருப்பி கேட்டபோது ஒழித்துவிடுவேன், வேலையில் இருந்து தூக்கிவிடுவேன் என மிரட்டியதாகவும் கூறியுள்ளார். இதன் காரணமாக ஊராட்சி செயலாளர் ராஜசேகர் உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த வேப்பங்குப்பம் காவல்துறையினர் ராஜசேகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாரை உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து மனைவி காந்திமதி வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக வேப்பங்குப்பம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில். ராஜசேகரனின் தற்கொலைக்கு காரணமான 17 வது வார்டு திமுக ஒன்றிய குழு உறுப்பினர் அரியை கைது செய்யக்கோரி உறவினர்கள் வேப்பங்குப்பம் காவல்நிலையம் எதிரே அரசு பேருந்தை சிறைபிடித்து சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பாதை மாற்றி விடப்பட்டது.

இதனையடுத்து வேலூர் எஸ்பி ராஜேஷ் கண்ணன் நேரில் வந்து உயிரிழந்த ராஜசேகரின் மனைவி காந்திமதி மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விசாரணை மேற்கொண்டார். அசம்பாவிதங்களைத் தடுக்க ADSP மற்றும் DSP தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் இது தொடர்பாக அணைகட்டு வட்டாட்சியர் விநாயக மூர்த்தி, இராமநாயினிகுப்பம் VAO சுரேஷ் உள்ளிட்ட வருவாய் துறையினருடன் வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் வேலூர் எஸ்.பி ராஜேஷ் கண்ணண் விசாரணை மேற்கொண்டார்.

இதனையடுத்து உறவினர்கள் கோரிக்கையை ஏற்று தற்கொலைக்கு காரணமான திமுக ஒன்றிய குழு உறுப்பினர் அரி மீது வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் தற்கொலைக்கு தூண்டியது, SC/ST ACT உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 3 தனிப்படை அமைத்து திமுக கவுன்சிலரை கைது செய்ய விரைந்துள்ளனர். மேலும் காவல் துறை சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து வருகிறது நிச்சம் புகாருக்குள்ளானவர் கைது செய்யப்படுவார் என காவல் துறை உறுதியளித்ததை அடுத்து உறவினர் மறியலை கை விட்டு உடலை வாங்க ஒப்புக்கொண்டனர்.

குற்றச்சாட்டுக்குள்ளான 17 வது வார்டு திமுக கவுன்சிலர் அரியை புதியதலைமுறை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கேட்டபோது, ’’அவர்தான் கடந்த 3 ஆண்டுகளாக ஊராட்சி பணத்தை கையாடல் செய்துள்ளார். இதனை அறிந்த நான் ஊராட்சி தலைவர் மற்றும் BDO விடம் தகவல் கொடுத்துள்ளேன். மேலும் அவரது தம்பிக்கு வேலை வாங்கித்தருவதாக நான் பணம் பெற்றதாக கூறியுள்ளார். அப்படி எந்த பணத்தையும் நான் பெறவில்லை. அவர் தற்கொலை செய்துகொண்ட செய்தி இப்போதுதான் எனக்கு தெரியும்’’ எனக் கூறியுள்ளார்.