தமிழ்நாடு

திட்டமிட்டபடி நாளை போராட்டம் நடைபெறும் - தலைமைச் செயலக ஊழியர் சங்கம்

திட்டமிட்டபடி நாளை போராட்டம் நடைபெறும் - தலைமைச் செயலக ஊழியர் சங்கம்

webteam

ஜாக்டோ-ஜியோ அமைப்புக்கு ஆதரவாக திட்டமிட்டபடி நாளை போராட்டம் நடைபெறும் என தலைமைச் செயலக ஊழியர் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் கடந்த 22-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் இன்றைக்குள் பணிக்குத் திரும்ப இறுதியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. பணிக்குத் திரும்பாத ஆசிரியர்களின் பணியிடங்கள், காலி பணியிடங்களாக கருதப்பட்டும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் தமிழக அரசின் எச்சரிக்கையும் மீறி தமிழகம் முழுவதும் இன்றும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இவர்களுக்கு பல்வேறு சங்கத்தைச் சேர்ந்தவர்களும் ஆதரவளித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து இந்நிலையில் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், புதன்கிழமை (நாளை) ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது என்றும் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாதபட்சத்தில் வரும் வெள்ளிக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தமிழ்நாடு தலைமைச்செயலக சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு அரசு அலுவலர் கழகம், தமிழ்நாடு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் மாநில மைய சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் அறிவித்திருந்தன.

இந்தச் சூழலில் ஜாக்டோ ஜியோ ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்த தலைமைச்செயலக ஊழியர்கள் 8 பேரை பணி இடைநீக்கம் செய்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நிதித்துறையை சேர்ந்த 4 பேர், சட்டப்பேரவைச்செயலகம், வேளாண்துறை, பொதுப்பணித்துறை, உள்துறைகளை சேர்ந்த தலா 1 நபர்கள் என மொத்தம் 8 பேரை பணி இடைநீக்கம் செய்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில், ஜாக்டோ-ஜியோ அமைப்புக்கு ஆதரவாக திட்டமிட்டபடி நாளை போராட்டம் நடைபெறும் எனவும் நாளை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெறும் எனவும் தலைமைச் செயலக ஊழியர் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.