நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் அனைத்து கட்சிகளும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை இறுதி செய்து வருகின்றன. திமுகவில் இன்று மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு கையெழுத்தானது.
மதிமுகவிற்கு ஒரு மக்களவைத் தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவைத் தொகுதி தர திமுக முன் வந்துள்ளது. மூன்று கட்டங்களாக இரு கட்சிகளுக்கும் பேச்சுவார்த்தை நடந்த சூழலில், திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஆரம்பத்தில் இரு மக்களவைத் தொகுதி ஒரு மாநிலங்களவைத் தொகுதி மதிமுகவிற்கு வழங்க வேண்டும் என அக்கட்சி கோரிக்கை வைத்திருந்தது. மேலும், தனித்து பம்பரம் சின்னத்தில் மதிமுக போட்டியிடும் என்றும் பேச்சுவார்த்தையின் போது தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் ஒரு மக்களவைத் தொகுதி மட்டுமே கொடுக்க முடியும் என திமுக தெரிவித்திருந்தது. ஆனால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக ஆலோசனை தெரிவித்திருந்தது. இதன் காரணமாக தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தை நீண்டபடியே இருந்தது.
ஆனால் தற்போது ஒப்பந்தம் இறுதியாகியுள்ளது. அதில் ஒரு மக்களவைத் தொகுதியும் ஒரு மாநிலங்களவைத் தொகுதியும், மதிமுக விருப்பப்படியே பம்பரம் சின்னத்திலேயே போட்டியிடலாம் என்றும் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. மதிமுக சார்பில் கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி திருச்சி அல்லது விருதுநகர் தொகுதியை ஒதுக்க வேண்டும் என்றும் மதிமுக சார்பில் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தாண்டு ஜூலை மாதம் வைகோவிற்கு மாநிலங்களவை பதவிக்காலம் முடிவடையும் சூழலில் மீண்டும் ராஜ்யசபா உறுப்பினர் பதவியை திமுக அளிப்பதற்கான உறுதியை அளித்துள்ளதன் அடிப்படையில் இன்று இருகட்சிகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
பேச்சுவார்த்தையின் பின் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, “நாங்கள் தனிச்சின்னத்தில் போட்டியிடுகிறோம். ராஜ்யசபா சீட் குறித்து எதும் பேசவில்லை. அதற்கு இன்னும் 15 மாதங்கள் இருக்கிறது. 40 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்வேன்” என தெரிவித்துள்ளார்.