தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் காணாமல் போன சுமார் 9 ஆயிரம் குழந்தைகளில் 688 பேர் இன்னும் தேடப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் தெருவோரம் தூங்கிக் கொண்டிருந்த இரு குழந்தைகள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதி சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக டிஜிபி சார்பில் உதவி ஐ.ஜி. நாகஜோதி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.
அதில், 2016-ஆம் ஆண்டு முதல் கடந்த ஆகஸ்ட் மாதம் வரை காணாமல் போன 9,882 குழந்தைகளில் 9,1194 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன 688 குழந்தைகளை மாநில காவல்துறையும், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவும் தேடி வருவதாக கூறப்பட்டுள்ளது. அதே போல குழந்தைகள் காணாமல் போனது குறித்து 9,573 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குழந்தை கடத்தல் தொடர்பாக 4,409 வழக்குகளும், பிச்சை எடுப்பதற்காக குழந்தைகளை விற்பது மற்றும் துன்புறுத்துதல் தொடர்பாக 874 வழக்குகள் கடந்த இரண்டரை ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தை கடத்தல் தொடர்பான 4,409 வழக்குகளில், 965 வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. 1,887 வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளன, 706 வழக்குகள் இன்னும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கவில்லை என கூறப்பட்டுள்ளது. அதேபோல 97 வழக்குகளில் தண்டனை வழங்கபட்டுள்ளது, 634 வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 120 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. அதேபோல, குழந்தை விற்பனை மற்றும் துன்புறுத்தல் தொடர்பான 874 வழக்குகளில், 234 வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது, 532 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன என்றும் அறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.