Seeman PT
தமிழ்நாடு

மக்களவைத் தேர்தல்| Start.. Camera.. Action! நாம் தமிழர் கட்சியின் புதிய யுக்தி; தேர்தலில் எடுபடுமா?

அறிமுகக் கூட்டத்தை நடத்தும் முன் தனது வேட்பாளர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பயிற்சிக்கூட்டங்களை நடத்தியுள்ளார்.

Angeshwar G

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. 4 முனை போட்டியாக இருக்கும் தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் பரபரப்பாக இயங்கி வருகின்றன. திமுக கூட்டணி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பரப்புரையை தொடங்கிவிட்டது. அதிமுக, பாஜக கூட்டணிகளும் பிரசாரத்தில் பிஸியாக இருந்துவரும் சூழலில், தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி சின்னம் தொடர்பான சிறு சிறு சிக்கல்களுக்குப் பின் களம் கண்டுள்ளது.

வேட்பாளர்களுடன் சீமான்

எப்போதும் ஒரேமேடையில்தான் சீமான் வேட்பாளர்களை அறிமுகப்படுத்துவார். தொடர்ந்து தொகுதிகள் தோறும் பிரச்சாரங்கள் நடைபெறும் தற்போது புதுவித யுக்தியையும் கையில் எடுத்துள்ளார் சீமான்.

அப்படி என்ன யுக்தி?

நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குள் ஒரு நடிகரும், இயக்குநரும் இயல்பாகவே இருக்கிறார். அதனால்தான் மக்களவைத் தேர்தல் பணிகளிலும் அது எதிரொலிக்கிறது. நாம் தமிழர் கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்துவதற்கான நிகழ்ச்சியை அவர் ஒருங்கிணைத்த விதம் சுவாரஸ்யமானது. இதுவரை மூன்று கூட்டங்களை வேட்பாளர்களுக்காக அவர் நடத்தியிருக்கிறார். இந்த கூட்டங்களில் வேட்பாளர்கள் எப்படி பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என்பதை அவர் கற்றுத் தந்திருக்கிறார். இப்படியொரு கூட்டம் கடந்த 21 ஆம் தேதியும் நடந்தது. இதில் பல்வேறு விஷயங்களை பேசிய சீமான், வேட்பாளர்களை வைத்து படப்பிடிப்பும் நடத்தியுள்ளார்.

குழு விளம்பரங்கள், திரை விளம்பரங்கள் எடுக்கும்போது பயன்படுத்தும் ப்ளுமேட்டில் வேட்பாளர்களை நிற்க வைத்தும், நடக்க வைத்தும் மானிட்டர் பார்த்து கரெக்ஷன் சொல்லியும் இயக்குநராகவே மாறிவிட்டார். இதற்கு முன்னதாக அவர் தனது கட்சி வேட்பாளர்களுக்கு உற்சாகமூட்டி ஆயத்தப்படுத்தினார் ஒவ்வொரு வேட்பாளரும் என்ன சொல்ல வேண்டும், அதனை எப்படிச் சொல்ல வேண்டும் என்றும் கூட்டத்தில் சீமான் பயிற்சி அளித்தார். இந்த காட்சிகள் நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் மற்றும் கட்சியினரின் சமுக வலைதளங்களில் பதிவேற்றப்பட்டு பகிரப்பட்டும் வருகிறது.

வேட்பாளர்களின் முகங்களை மக்கள் மனதில் பதியவைப்பது என்பது அத்தனை சுலபமானதல்ல. இதன்காரணமாகவே தொடர்ச்சியாக மக்கள் கவனிக்கும் வகையில், வேட்பாளர்களை அறிமுகப்படுத்த அரசியல் கட்சிகள் செயல்பட்டுவருகின்றன. அதற்கான நாட்களையும் அரசியல் கட்சிகள் எடுத்துக்கொள்ளும். அதேசமயத்தில் சின்னமும் வாக்காளர்கள் அளிக்கும் வாக்குகளில் முக்கியப் பங்கு வகிக்கும்.

சீமான் கட்சி சின்னங்கள்

ஆனால், தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு இரு சிக்கல்கள் இருந்தன. ஒன்று அடுத்த 25 நாட்களுக்குள் வரும் தேர்தல். இது அனைத்து கட்சிகளுக்கும் இருக்கும் ஒன்று. இரண்டாவது சின்னம். நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட கரும்பு விவசாயி சின்னத்திற்கு பதில் மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. மைக் சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். எந்த சின்னம் கொடுத்தாலும் பிரச்சனையில்லை வெற்றிபெறுவோம் என சீமான் சொன்னதும் குறிப்பிடத்தக்கது.

#BREAKING | சின்னத்தை பார்த்து வாக்களிக்கும் முறையை கைவிடுங்கள்: சீமான்

முன்னதாகவே வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டாலும், வேட்பாளர்களின் அறிமுகத்தை சற்று தாமதமாகவே, நேற்று நடத்தியுள்ளது நாம் தமிழர் கட்சி. இந்நிலையில் புதிய சின்னம், புதிய யுக்தி, 40 தொகுதிகளிலும் போட்டி என பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது நாம் தமிழர் கட்சி.