செய்தியாளர் - மருதுபாண்டி
நாம் தமிழர் கட்சியின் நெல்லை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் சத்யாவை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நெல்லை மேலப்பாளையத்தில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் நேற்று பேசினார். அவர் பேசுகையில்,
"இத்தனை ஆண்டுகால ஆட்சியில் எந்த மாற்றத்தையும் எந்த முன்னேற்றத்தையும் மக்கள் சந்திக்கவில்லை. இந்த ஆட்சி சர்வாதிகார ஆட்சி என்று சொல்வதை விடக் கொடுங்கோலன் ஆட்சி என்றுதான் சொல்ல வேண்டும். ஊழல் லஞ்சம் கருப்புப் பணத்தை ஒழிக்க ₹1000, ₹500 ஒழிக்கப்பட்டது என்றால், இத்தனை முதலாளிகள் வீட்டில் ஏன் அமலாக்கத் துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது?
தமிழகத்தில் அனைத்தும் விலை உயர்ந்துவிட்டது. சொத்து வரி, மின் கட்டண உயர்வு என அனைத்தும் கூடியதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல், டீசல் உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.
திமுக இஸ்லாமியர்களுக்குப் பாதுகாப்பு என நினைக்கிறார்கள். இஸ்லாமியர்கள் சிறுபான்மையினர் என்ற எண்ணத்தை எடுக்கவேண்டும். பெரும்பான்மை மக்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் ஒரே வரிதான். சிறுபான்மையினர் என்றால் சலுகை கிடைக்கும் எனச் சொல்கிறார்கள். ஆனால் அவர்களில் யாரும் இத்தனை ஆண்டுகளில் பிரதமராகவோ? முதல்வராகவோ? ஆனது கிடையாது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் அடிக்கல் நாட்டப்பட்டது. அவர்கள் ஆட்சிக்காலத்திலேயே அந்த மருத்துவமனையைக் கட்டி முடித்திருக்கலாம். எடப்பாடியும், உதயநிதியும் படத்தை வைத்து படம் காட்டுகின்றனர். உங்கள் ஆட்சி சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்கத் துணிவு உள்ளதா?
தமிழகத்தில் தனித்துப் போட்டியிட எந்த கட்சிக்கும் துணிவு இல்லை. எங்கள் மீது பயம் ஏற்பட்டதால் தான் சின்னத்தைத் தர மறுத்துவிட்டனர்.
இந்த தேர்தல் முடிந்த பின்னர் விவசாயி சின்னம் எங்களுக்கு மீண்டும் கிடைக்கும். பெரும் புரட்சியை இந்த உலகத்தில் விதைத்தவர்கள், அதனை ஒலிவாங்கி மூலம் அதனை விதைத்தார்கள். ஒரே நாளில் உலகில் அனைவரிடமும் எங்களது சின்னம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
திமுகவுக்கு வாக்களிக்காவிட்டால் பாஜக வந்து விடும் எனச் சொன்னார்கள், அதை நம்பி திமுகவுக்கு மக்கள் வாக்களித்தனர். ஆனால் பாஜக வந்துவிட்டது. ஆகவே எனக்கு வாக்களித்தால்தான் பாஜக வராது" என்றார்.