தமிழ்நாடு

ராமேஸ்வரத்தில் திடீரென உள்வாங்கிய கடல் - மீன்பிடிக்க தடை

rajakannan

ராமேஸ்வரத்தை ஒட்டியுள்ள கடலோரப் பகுதியில் கடல் நீர் உள்வாங்கியதை அடுத்து, மீன்பிடிக்க அரசு தடை விதித்துள்ளது.

தனுஷ்கோடி, இராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம் ஆகிய கடலோரப் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக சூறைக்காற்று வீசி வருகிறது. இந்நிலையில் இன்று காலை ராமேஸ்வரம் மற்றும் சங்குமால் துறைமுகப்பகுதிகளில் திடீரென கடல் சுமார் நூறு மீட்டருக்கும் மேல் உள்வாங்கியது. இதனால் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் மீனவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், மூன்றாவது நாளாக தொடரும் சூறைக்காற்றால் இராமேஸ்வரம், பாம்பன் மண்டபம், கீழக்கரை, தொண்டி உள்ளிட்ட பல்வேறு துறைமுகப் பகுதிகளில்  மீனவர்களுக்கு அரசால் வழங்கப்படும் மீன்பிடி அனுமதி சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 45கிமீ முதல் 55கிமீ வேகத்தில் காற்று வீச இருப்பதாக எச்சரிக்கை விடுத்து  மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லக்கூடாது என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் சுமார் ஆயிரத்து 700க்கு மேற்பட்ட விசைப்படகுகளும், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் மீன்பிடிக்கச் செல்லாமல் கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

அரசின்  மீன்பிடித் தடையால் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடித் தொழிலாளர்களும், சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி சார்பு தொழிலாளர்களும் வேலையிழந்துள்ளனர். மீன்பிடிப் படகுகள் செல்லாததால் சார்பு நிறுவனங்கள் பூட்டப்பட்டுள்ளன. இதனால் நாளொன்றுக்கு சுமார் ரூ.40 கோடிக்கும் மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற மீன்பிடித் தடைக்காலங்களில் அரசு, மீன்பிடித் தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும். அதேபோல ஆபத்துக்காலங்களில்  தங்களது படகுகளைப் பாதுகாக்க தூண்டில் வளைவு ஏற்படுத்துவதோடு புதிய ஜெட்டி அமைத்துத்தர வேண்டும் என அனைத்து மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.