கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதி pt web
தமிழ்நாடு

“கடல் அமைதியாகும்வரை என்ன வேணாலும் நடக்கலாம்” - குமரியில் கடல் சீற்றம்... சென்னைக்கு வந்த அழைப்பு!

”மக்களை முகாம்களில் பாதுகாப்பாக தங்கவைத்து அவர்களுக்குத் தேவையானதை நிறைவேற்றி வருகிறோம். கடல் அமைதியாகும்வரை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்" குமரியில் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட நபர்

Angeshwar G

செய்தியாளர்கள் ஸ்டாலின் மற்றும் மனோ

வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கிய நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது.

உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மையப்பகுதி தெற்கு ஆந்திரா நோக்கி நகருவதால் சென்னையில் மழைக்கான தாக்கம் குறைவாக இருக்கும் என இன்று காலை தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், நேற்று பெய்த மழையின் காரணமாக பல்வேறு இடங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன.

இந்நிலையில், மாநில அவசர கால செயல்பாட்டு மையத்திற்கு வரும் புகார்கள், அந்த பிரச்னையை தீர்க்க எடுக்கப்படும் நடவடிக்கைகளும் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

நேற்று மட்டும் மாநில அவசர கால செயல்பாட்டு மையத்திற்கு 500 முதல் 600 புகார்கள் வந்துள்ளன. அதில், பெரும்பாலும் தண்ணீர் தேங்கியது தொடர்பான புகார்களே வந்தன. ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே அவசர கட்டுப்பாட்டு மையங்கள் ஏற்படுத்தப்பட்ட நிலையில், சென்னைக்கு வரும் புகார்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திருப்பிவிடப்பட்டது.

இன்று சென்னை மற்றும் வட மாவட்டங்களில் பெருமளவில் மழை இல்லாததால், பெரும்பாலும் புகார்கள் வரவில்லை. ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஒரு புகார் வந்துள்ளது. அதில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அழிக்கால் எனப்படும் மீனவ கிராமத்தில், நேற்று இரவு முதல் பயங்கர கடல் சீற்றம் இருந்ததாகவும், இதன்காரணமாக அந்த கிராமத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கடல்நீர் உட்புகுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக மீனவ மக்கள் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து, இங்கிருக்கும் அவசர கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு நிலைமையைக் கேட்டறிந்தனர்.

அந்த கிராமத்தில் நேற்று இரவு 9 மணி முதல் கடல் சீற்றம் அதிகளவில் காணப்பட்டது. அந்த பகுதிகளில் வசிக்கும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், ஆண்கள் தங்களது வீடுகளில் தேங்கியுள்ள நீரை மோட்டார் மூலம் வெளியேற்றி வருகின்றனர்.

மீட்புப் பணிகளில் ஈடுபட்ட நபர் கூறுகையில், “கடல் சீற்றம் ஏற்பட்டு அரைமணி நேரத்திற்குள் கடல்நீர் வீட்டுக்குள் புகுந்திவிட்டது. மக்களைத்தான் பாதுகாக்க முடிந்ததே தவிர அவர்களது பொருட்களை காப்பாற்ற முடியவில்லை. மக்களை முகாம்களில் பாதுகாப்பாக தங்கவைத்து அவர்களுக்குத் தேவையானதை நிறைவேற்றி வருகிறோம்.

கடல் அமைதியாகும்வரை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அத்தகைய சூழல்தான் நிலவுகிறது. அரசு அதிகாரிகள் பருவ மழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆனால், கடல்சீற்றம் எதிர்பாராத விதமாக ஏற்பட்டுவிட்டது. அரசு அதிகாரிகள் நேற்று இரவே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வந்துவிட்டார்கள். தேவையான நடவடிக்கைகளை வேகமாக எடுத்து வருகிறார்கள்” என தெரிவித்தார்.