தமிழ்நாடு

கடல் சீற்றம்: கடலுக்குள் செல்லாமல் கரையில் நிற்கும் படகுகள்

கடல் சீற்றம்: கடலுக்குள் செல்லாமல் கரையில் நிற்கும் படகுகள்

webteam

தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழையால் கடலூர், நாகை மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் தொடர்ச்சியாக கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. 

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் தொடர்ந்து நான்காவது நாளாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் போன்ற பத்துக்கு மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 3 ஆயிரம் மீனவர்கள் கடல் சீற்றத்தால் மீன் பிடிப்பதை தவிர்த்து வருகின்றனர். இதனால் 400க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. அதே போல் கடலூர் மாவட்டத்தில் கன மழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக பெரும்பாலான மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. மழை தொடர்ந்து பெய்து வருவதால் மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக கரையோரத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். மழை நீர் கடலில் கலப்பதால் மீன் இனப்பெருக்கம் அதிகரிக்கும் என்றும், இதனால் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் போது மீன்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் மீனவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.