தமிழ்நாடு

ராமேஸ்வரத்தில் கடல் உள்வாங்கியது!

ராமேஸ்வரத்தில் கடல் உள்வாங்கியது!

webteam

கஜா புயல் காரணமாக ராமேஸ்வரம் பகுதியில் கடல் திடீரென்று உள்வாங்கியுள்ளது

கஜா புயல் நாகை வேதாரண்யம் இடையே கரையை கடக்கத் தொடங்கியது. புயலின் முன் பகுதி கரையை கடக்கத் தொடங்கிய அந்த நேரத்தில் நாகை, கடலூர், காரைக்கால், திருவாரூர் மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது. புயல் கரையை கடக்கத் தொடங்கிய போது புதுச்சேரியில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. வேதாரண்யம், நாகை, கடலூர் உள்ளிட்ட இடங்களில் 100 முதல் 130 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் சூறைக்காற்று வீசியது.

அதிகாலை 2 மணியளவில் கஜா புயலின் முதல் பகுதி கரையை கடந்தது. அதன்பின்னர் காற்றின் வேகம் மேலும் அதிகரித்தது. கடலூர், நாகை, காரைக்கால், திருவாரூரில் பெரும்பால பகுதிகளில் சூறைக்காற்றால் ஏராளமான மரங்கள் சாய்ந்தன. இதேபோல் மின்கம்பங்களும் சேதமடைந்தன. காரைக்காலில் மின்மாற்றி மீது மரம் சாய்ந்து விழுந்ததில் மின்மாற்றி வெடித்துச் சிதறியது. இதனால் 6 மாவட்டங்களிலும் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன் தொலைதொடர்பும் பாதிக்கப்பட்டது. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த சுமார் 80‌ ஆயிரம் பேர் அரசு சார்பில் அமைக்கப்பட்டிருந்த முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.

இதற்கிடையே காரைக்கால், வேதாரண்யம் உள்ளிட்ட இடங்களில் ஏராளமான வீட்டின் மேற்கூரை காற்றில் பறந்ததால் வீட்டில் இருந்த மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தின் பாடாலூர், இரூர், சிறுவாச்சூர் ஆகிய பகுதிகளிலும், தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. புயலால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான இடங்களில் இரவோடு இரவாக மீட்பு பணிகள் நடைபெற்றன. தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் புயலின் மையப் பகுதியான கண் பகுதி முற்றிலுமாக கரையை கடந்துவிட்டது. இதையடுத்து காற்றின் அளவு மற்றும் மழையின் அளவு குறையுமென வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆனால் மீண்டும் புயலின் பின்பகுதி கரையை கடக்கும் போது, அதிக வேகத்தில் காற்று வீசும் என்பதால் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராமேஸ்வரத்தில் கடல் உள்வாங்கியுள்ளது. 50 மீட்டர் அளவுக்கு உள்வாங்கியுள்ளது. ’நவம்பர், டிசம்பர் மாதங்களில் கடல் உள்வாங்கிவிட்டு பிறகு இயல்புக்கு வருவது வழக்கம்தான்’ என மீனவர்கள் தெரிவித்தனர்.