தமிழ்நாடு

மரக்கன்று நட்டு விவேக்கின் லட்சியத்தை நிறைவேற்றுவோம்: உறுதிமொழி எடுத்த பள்ளி மாணவர்கள்

மரக்கன்று நட்டு விவேக்கின் லட்சியத்தை நிறைவேற்றுவோம்: உறுதிமொழி எடுத்த பள்ளி மாணவர்கள்

kaleelrahman

இயற்கை மீது ஆர்வம் கொண்ட நடிகர் விவேக் மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள், தமிழகம் முழுவதும் மரக்கன்றுகளை நட்டு நடிகர் விவேக்கின் லட்சியத்தை நிறைவேற்றுவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

நடிகரும் சமூக ஆர்வலருமான விவேக் இன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரின் உயிரிழப்பு ஒட்டுமொத்த திரையுலகத்தையும் தமிழக மக்களையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அவரின் மறைவிற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வரும் நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள பெரியாலூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்து விவேக்கிற்கு தங்களது அஞ்சலியை செலுத்தினர்.

அப்போது தீபன் என்ற மாணவன் உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் ”நடிகர் விவேக் மரம் வளர்ப்பதில் தீராத பற்று கொண்டவர். ஒரு கோடி மரக்கன்றுகளை நடவேண்டும் என்ற லட்சியத்தோடு மரக்கன்றுகளை நடவு செய்துள்ளார். அவரின் நினைவாக இன்று எங்கள் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 20 மரக்கன்றுகளை நட்டுள்ளோம். இதேபோல் தமிழகத்தில் உள்ள மற்ற பள்ளி மாணவர்களும் இன்று மாலைக்குள் அதிக அளவிலான மரக்கன்றுகளை நட்டு, அதை முறையாக பராமரித்து வளர்க்க வேண்டும். அப்போதுதான் நடிகர் விவேக்கின் ஆன்மா சாந்தி அடையும்” என்று அந்த மாணவன் உருக்கமாக பேசி பதிவு செய்துள்ள வீடியோ காண்போரை நெகிழ வைத்துள்ளது.

இதேபோல கும்பகோணம் கார்த்திக் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடிகர் விவேக் உருவப்படத்திற்கு பள்ளி மாணவ,மாணவிகள் கண்ணீர் மல்க மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அப்துல் கலாமின் கனவை கையில் எடுத்து அதனை நிறைவேற்றும் விதமாக தமிழகம் முழுவதும் ஒரு கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற அவரது எண்ணத்தை தொடரும் விதமாக பள்ளி மாணவ, மாணவிகள் தமிழகம் முழுவதும் மரக்கன்றுகளை நட்டு நடிகர் விவேக்கின் லட்சியத்தை நிறைவேற்றிக் காட்டுவோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.