தமிழ்நாடு

“மழலைகளின் படிப்புக்காக வகுப்பை புறக்கணித்த மாணவர்கள்” - திருச்சியில் நெகிழ்ச்சி

“மழலைகளின் படிப்புக்காக வகுப்பை புறக்கணித்த மாணவர்கள்” - திருச்சியில் நெகிழ்ச்சி

webteam

மழலை குழந்தைகளின் படிப்புக்காக தங்கள் வகுப்புகளை மாணவச் சிறுவர்கள் புறக்கணித்த சம்பவம் திருச்சியில் நிகழ்ந்துள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த பெரமங்கலத்தில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. எட்டாம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் 115 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஆங்கில வழி பாடத்திட்டத்திற்கு புதிதாக எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி மாணவர்கள் சேர்க்கை பள்ளியில் நடைபெற்றது. அதன்படி, எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி படிக்க பள்ளியில் சேர்ந்த மழலைகளுக்கு, ஆசிரியை ஒருவர் பாடம் எடுத்து வந்தார். திடீரென அந்த ஆசிரியரை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். 

இதனால் மழலை மாணவர்களுக்கு 10 நாட்களாக பாடம் எடுக்கப்படவில்லை. அவர்கள் எதுவும் படிக்காமல் பள்ளிக்கு சென்று அமர்ந்துவிட்டு வீடு திரும்பியுள்ளனர். இதற்கு நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர்கள் கல்வித்துறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்துள்ளனர். ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள், மழலைகளுக்காக நூதன போராட்டத்தில் இறங்கினர். பள்ளிக்கு செல்லாமல் வகுப்புகளை புறக்கணித்த அவர்கள், பெற்றோர்களின் ஆதரவோடு ஊரில் உள்ள சமுதாயக் கூடத்தில் அமர்ந்தனர்.

அந்த மாணவர்களுக்கு ஊர்மக்களே மதியம் உணவு சமைத்துக் கொடுத்தனர். மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வராததால் அனைவருக்கும் அரை நாள் விடுப்பு என பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அறிந்த மாவட்ட கல்வி அலுவலர், சமுதாய கூடத்திற்கு வந்து மாணவர்கள் மற்றும் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அத்துடன் மழலை மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பதற்காக உடனே ஆசிரியர் ஒருவரையும் நியமித்தார். இதையடுத்து மாணவர்கள் பள்ளிக்கு திரும்பினர். பெற்றோர்களும் கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.