தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிவாரியாக 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணாக்கர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இன்று சென்னை நீலாங்கரையில், பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இதை நடிகர் விஜய் வழங்கி, அவர்களுக்குப் பாராட்டு தெரிவித்தார். மாணவர்களும், அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய நடிகர் விஜய், “இது, ஒரு பொறுப்புணர்ச்சி வந்ததாக நான் நினைக்கிறேன். வருங்கால இந்தியாவின் இளம் நம்பிக்கை நட்சத்திரங்கள் உங்கள் அனைவரையும் இங்கு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். உன்னில் என்னைக் காண்கிறேன் என்ற பார்வையில், உங்களைப் பார்க்கும்போது என்னுடைய பள்ளி வாழ்க்கை ஞாபகங்கள் நினைவுக்கு வந்து போகின்றன. நான் உங்களைப்போல பெஸ்ட் மாணவன் அல்ல. ஒரு சராசரி மாணவர்தான். நான் அப்படி, இப்படி ஆகவேண்டும் என்று எண்ணவில்லை. என்னுடைய கனவு முழுவதும் சினிமாவாகவே இருந்தது.
’காடு இருந்தா எடுத்துக்குவானுங்க... ரூபா இருந்தா பிடுங்கிக்குவானுங்க. ஆனா படிப்ப உன்கிட்ட இருந்து எடுத்துக்கவே முடியாது’ என சமீபத்திய படம் ஒன்றில் ஒரு வசனம் வரும். அது மிகவும் பாதித்த வசனம். இது, நூற்றுக்கு நூறு மட்டும் உண்மை மட்டுமல்ல, எதார்த்தமும்கூட. அப்படியான படிப்புக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன். அதற்காக அமைந்ததுதான் இந்த நிகழ்வு.
வேறு என்ன வாழ்க்கையில் இலவசமாகக் கிடைப்பது அறிவுரை மட்டும்தான். ஆனால், அது உங்களுக்கு சுத்தமாகப் பிடிக்காது என நினைக்கிறேன். நான் படிப்பதைவிட, அதைப் படித்துச் சொல்லிக் கேட்பதைச் சுலபமாக உணர முடியும் என்பார்கள். நான், அந்த வகையைச் சேர்ந்தவன். படங்களில்கூட அப்படித்தான் படிக்காமல் சொல்லிக் கேட்கிறேன்.
ஒவ்வொரு மாணவ மாணவிகளும் உங்களிடம் அம்மா, அப்பாவிடம் சென்று ’இனிமே காசு வாங்கிட்டு ஓட்டு போடாதீங்க’ எனச் சொல்லிப் பாருங்கள். சும்மா முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் சொன்னீர்கள் என்றால் அது கண்டிப்பாக நடக்கும்” எனப் பேசினார். அவருடைய ஒவ்வொரு பேச்சுக்கும் மாணவர்கள் கைதட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர்.
நடிகர் தனுஷ் பட வசனம் முதல் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய நடிகர் விஜய் பேச்சு குறித்து கேட்க இந்த வீடியோவில் பார்க்கவும்.