தமிழ்நாடு

தூக்கத்தால் ஏற்படும் வாகன விபத்துகளை தவிர்க்க பள்ளி மாணவரின் அசத்தல் கண்டுபிடிப்பு!

தூக்கத்தால் ஏற்படும் வாகன விபத்துகளை தவிர்க்க பள்ளி மாணவரின் அசத்தல் கண்டுபிடிப்பு!

webteam

வாகனம் ஓட்டும்போது சிலர் தூங்கிவிடுவதால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில், கண் இமையை மூடினால் உடனடியாக அலாரம் அடிக்கும் கண் கண்ணாடியை கண்டுபிடித்துள்ளார் தூத்துக்குடியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவரொருவர்.

தூத்துக்குடி முத்தையாபுரம் சாந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சம்சுதீன். இவரது மகன் உவைஷ் தூத்துக்குடி ஸ்பிக் நகரில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். உவைஷ் அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் கொண்டவர். நாட்டில் 40 சதவீத விபத்துக்கள் வாகன ஓட்டிகள் தூக்கத்தினால் நடப்பதால், அந்த விபத்துக்களை தடுக்கும் வகையில் ஆன்ட்டி ஸ்லீப் கிளாஸ் என்ற கண்ணாடியை கண்டுபிடித்துள்ளார் உவைஷ்.

மிகக் குறைந்த செலவில் இன்ஃப்ரா ரெட் ஃப்ரீகுவன்சி சென்சார் மற்றும் பேட்டரி, கண்ணாடி ஆகியவற்றை  பயன்படுத்தி உவைஷ் கண்டுபிடித்துள்ள இந்தக் கண்ணாடியை, அணிந்துகொண்டு ஓட்டும்போது தூக்கம் காரணமாக கண் இமையை ஒருவர் மூடினால், அதில் பொருத்தப்பட்டுள்ள அலாரம் அடித்து அவர்கள் தூக்கத்திலிருந்து விடுபட்டு விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கப்படும். இந்த கண்ணாடி, வாகன ஓட்டிகளுக்கு மட்டுமல்லாது இரவு நேர பணியில் ஈடுபடுவோர், இரவு நேர காவலாளிகள் ஆகியோருக்கும் உதவக்கூடியது என்கிறார் மாணவர் உவைஷ்.

இத்தகைய கண்ணாடியை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ள மாணவன் உவஷ்யை, நாமக்கல் லாரி வாகன ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் சிறந்த இளம் விஞ்ஞானி என்று பட்டத்தை வழங்கி பாராட்டியுள்ளனர். மேலும் மத்திய அரசின் தேசிய அறிவியல் கண்டுபிடிப்பில் இவரது கண்டுபிடிப்பு தேர்வு செய்யப்பட்டு, இந்த கண்டுபிடிப்பை மேம்படுத்த ரூபாய் 10 ஆயிரம் வெகுமதியாக வழங்கப்பட்டுள்ளது.