தமிழ்நாடு

பள்ளி மாதாந்திர கட்டணம்: தனி அறையில் வைத்து கட்டாயப்படுத்தியதாக பெற்றோர் புகார்

பள்ளி மாதாந்திர கட்டணம்: தனி அறையில் வைத்து கட்டாயப்படுத்தியதாக பெற்றோர் புகார்

kaleelrahman

பள்ளி மாதாந்திர கட்டணத்தை கட்ட வலியுறுத்தி மாணவர்களின் பெற்றோர்களை தனி அறையில் வைத்து கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக கோவில்பட்டி தாசில்தார் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஆழ்வார் தெருவில் செயின்ட் பால்ஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த பள்ளியில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றது. அத்துடன் மாதந்தோறும் தேர்வுகள் நடத்தப்பட்டு, அந்த விடைத்தாள்களை பெற்றோர்கள் மூலம் பள்ளி நிர்வாகம் பெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று விடைத்தாள்களை கொடுக்கச் சென்ற பெற்றோரிடம் கடந்த மாதம் பள்ளியின் மாதாந்திர கட்டணத்தை கட்ட தவறியவர்களை ஒரு அறையில் வைத்து கட்டணத்தை கட்டச் சொல்லி வலியுறுத்தியதாக புகார் எழுந்தது. இந்நிலையில், அப்பள்ளியில் பயிலும் மாணவரின் தந்தை ஆரோக்கிய ராஜ் என்பவர் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஏற்கெனவே அனைத்துவிதமான கட்டணத்தையும் கட்டிய பின்னர், மாதாந்திர கட்டணம் செலுத்த காலதாமதம் ஏற்பட்டதால் விடைத்தாள்களை வாங்க மறுத்ததாகவும், பணத்தை செலுத்தி டோக்கன் வாங்கி வந்தால் மட்டுமே விடைத்தாள்களை பெறுவோம் என்று கூறி ஒரு அறையில் பெற்றோர்களை வைத்துள்ளதாக கூறினார்.

இதையடுத்து செய்தியாளர்கள் அங்கு சென்ற நிலையில், ஆரோக்கியராஜ் மற்றும் அங்கிருந்த பெற்றோர்களிடம் விடைத்தாள்களை பள்ளி நிர்வாகத்தினர் பெற்றுக்கொண்டனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி தாசில்தார் அமுதா மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆரோக்கியராஜ் மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மாணவர்களின் பெற்றோரிடம் கல்விக் கட்டணத்தை கட்டாயப்படுத்தி வசூலிக்கக் கூடாது என அரசு கூறியுள்ள வழிமுறைகளின் படி, கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்திற்கு தாசில்தார் அமுதா அறிவுறுத்தினர். மேலும் இனிமேல் கட்டணம் கேட்டு நெருக்கடி கொடுத்தால் புகார் அளிக்கும்படி போராட்டத்தில் ஈடுபட்ட ஆரோக்கியராஜிடம் தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.