மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக கோவை மாவட்டத்தின் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக, மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை நிரம்பியது. இதனால், பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு மூன்றாவது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகருக்கு நீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணைக்கும் தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது. கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையும் முழு கொள்ளளவான 90 அடியை எட்ட இருப்பதால், அமராவதி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழையும், கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக கனமழை எச்சரிக்கையால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குந்தா, உதகை, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.