அரியலூர் பள்ளி மாணவி தற்கொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மதம் தொடர்பான பரப்புரை எதுவுமில்லை என பள்ளிக்கல்வித்துறை விளக்கம் தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்று காலை அரியலூர் மாணவி மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்தபோது பேசிய வீடியோவின் மற்றொரு பகுதி தற்போது வெளியாகியிருந்தது. மதம் மாற மாணவி கட்டாயப்படுத்தப்பட்டார் என்று கூறப்பட்ட நிலையில், புதிதாக வெளியான அந்த வீடியோவில், தம்மை பொட்டு வைக்கக் கூடாது என யாரும் கட்டாயப்படுத்தவில்லை என மாணவி குறிப்பிட்டிருந்தார்.
அரியலூர் மாணவி தற்கொலைக்கு மத மாற்ற முயற்சியே காரணம் வீடியோவை குறிப்பிட்டு பாஜக குற்றச்சாட்டு வைத்து வந்த நிலையில், இந்த புதிய வீடியோ இப்பிரச்னையில் புதிய திருப்புமுனையை கண்டது. இந்த புதிய விரிவான வீடியோவில், கன்னியாஸ்திரி ஒருவர் தொடர்ந்து கணக்கு எழுதச் சொல்லி கட்டாயப்படுத்தியதாக மாணவி புகார் தெரிவித்திருக்கிறார். மேலும் விடுதிக் காப்பாளர் தனக்கு அதிக வேலை செய்யச் சொல்லி துன்புறுத்தியதாக மாணவி குற்றச்சாட்டு வைத்திருக்கிறார். இதனால் தனது படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போனதாக குறிப்பிட்டுள்ளார் அவர்.
இந்த புதிய வீடியோ வெளியாகியிருக்கும் இதேநேரத்தில், அரியலூர் மாணவிக்கு சித்தி கொடுமை நடந்திருக்கலாமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. கடந்த 2020ல் இம்மாணவியிடமிருந்து சித்தி கொடுமை என சைல்டு லைன் எண்ணுக்கு அழைப்பு வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளன. அப்போது குழந்தை நல அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விசாரணைக்கு சென்றுள்ளனர். அப்போது சித்தி கொடுமை இல்லை என மாணவி மறுத்ததாக சைல்டு லைன் உறுப்பினர் தற்போது தகவல் தெரிவித்திருக்கிறார். இது குறித்து திருமானூர் சைல்டு லைன் குழு உறுப்பினர் மாணவியிடம் கடந்த 2020-ல் நடத்திய விசாரணை தொடர்பான விவரங்களை அறிக்கையாக தயார் செய்து சீலிடப்பட்ட கவரில் வைத்து அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளார்.
இப்படியான சூழலில்தான் பள்ளிக்கல்வித்துறை இதுகுறித்து தனி அறிக்கையொன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, ``மாணவி தற்கொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மதம் தொடர்பான பரப்புரை எதுவும் இல்லை. பள்ளியில் பயிலும் மாணவர்களில் இந்துக்கள் 5,200 பேர்; கிறிஸ்துவர்கள் 2,290 பேர்; இஸ்லாமியர்கள் 179 பேர் இருக்கின்றனர். பள்ளியில் மாணவர்களிடம் மதரீதியான பரப்புரைகளில் தலைமையாசிரியரோ, பிற ஆசிரியர்களோ ஈடுபடவில்லை.
மாணவி லாவண்யா, மார்ச் 2020 நடந்த பொதுத்தேர்வில் பத்தாம் வகுப்பில் பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார். தொடர் விடுமுறைகளின் போது மற்ற மாணவிகள் சொந்த ஊருக்கு செல்லும் போதும், சம்பந்தப்பட்ட மாணவி கன்னியாஸ்திரிகள் இல்லத்தில் தங்கியிருந்துள்ளார். ஜன.10ஆம் தேதி உடல்நலக்குறைவால், பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சொந்த ஊருக்கு மாணவி அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர் நேரடியான பள்ளிக்கு சென்று ஆய்வு மேற்கொண்ட போதெல்லாம், மாணவ மாணவிகளிடமிருந்து மதம் சார்பாக புகார்கள் ஏதும் பெறப்படவில்லை. பள்ளி இயல்பாகவே செயல்பட்டு வந்துள்ளதால் மத சார்பான புகார் ஏதும் முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கோ, மாவட்டக்கல்வி அலுவலகத்திற்கோ பெறப்படவில்லை. மேலும் ஒவ்வொரு கல்வியாண்டிலும் இப்பள்ளி சிறுபான்மை இனத்தினரால் நடத்தப்பட்டாலும் அதிக அளவில் கல்வி பயிலும் மாணவர்கள் இந்துமதத்தை சார்ந்தவர்கள் என்பதால் இப்பள்ளியில் மதரீதியாக பிரச்சாரங்கள் ஏதும் தலைமையாசிரியராலோ அல்லது மற்ற ஆசிரியர்களாலோ மாணவ மாணவிகளிடம் செய்யப்படவில்லை” என விசாரணையின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.