தமிழ்நாடு

பெற்றோர்களிடம் அதிக பணம் கேட்டு மிரட்டிய தாளாளர் கைது

பெற்றோர்களிடம் அதிக பணம் கேட்டு மிரட்டிய தாளாளர் கைது

Rasus

கல்விச் சட்ட விதிகளை மீறி பெற்றோர்களிடம் பணம் கேட்டு மிரட்டியதாக தனியார் பள்ளியின் தாளாளர் உள்பட 5 பேர் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், பள்ளி தொடர்ந்து நடைபெறுமெனவும், பெற்றோர் அச்சம்கொள்ள வேண்டாமெனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை குரோம்பேட்டை, ஆலப்பாக்கம், பெருங்களத்தூர் உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வரும் தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். சில தினங்களுக்கு முன் பள்ளி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், மாணவர்களின் பெற்றோர்கள் 2 லட்சம் ரூபாயை வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பள்ளியில் மாணவர்களின் பெற்றோர்களிடையே எதிர்ப்பு கிளம்பியது. இதுகுறித்து தாளாளர் சந்தானத்திடம் தகவல் கேட்டறியச் சென்றபோது, அவர் தகாத வார்த்தைகளால் மிரட்டல் விடுத்ததாக பெற்றோர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில், தாளாளர் சந்தானம் உள்பட பள்ளி ஊழியர்கள் 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பரங்கிமலை காவல் துணை ஆணையர் முத்துச்சாமி, பள்ளி தொடர்ந்து செயல்படும் என்பதால் பெற்றோர் அச்சம் கொள்ள வேண்டாமெனத் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் மீது 2009ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கல்விச் சட்டம் உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள காவலர்கள், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.