முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் முதல்கட்டமாக 1,545 பள்ளிகளில் தொடங்கப்பட்டு, 1,14,000 குழந்தைகள் பயனடைந்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, அனைத்து நகர்ப்புறம் மற்றும் ஊரகப்பகுதிகளில் உள்ள 31,008 அரசு தொடக்கப் பள்ளிகளில், காலை உணவுத்திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. இதன்மூலம் 15,75,000 மாணாக்கர் பயன்பெறுவார்கள் என்றும் தமிழக அரசின் செய்திக் குறிப்பு சுட்டிக்காட்டுகிறது.
இந்தத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாகை மாவட்டத்தில் வரும் 25ஆம் தேதியன்று தொடங்கி வைக்க உள்ளார். மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏக்களும் எம்.பிக்களும் அவரவர் தொகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைக்குமாறு தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், பா.ம.க., பா.ஜ.க., விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட உள்ளிட்ட கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.