தமிழ்நாடு

பைக்கில் இருந்து தவறி விழுந்த சிறுவன் - விபத்தில் அண்ணன் கண் எதிரே உயிரிழப்பு!

பைக்கில் இருந்து தவறி விழுந்த சிறுவன் - விபத்தில் அண்ணன் கண் எதிரே உயிரிழப்பு!

Sinekadhara

சென்னை குன்றத்தூர், புது வட்டாரம் பகுதியைச் சேர்ந்தவர் சிபாஸ்(15), குன்றத்தூரில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தம்பி அனஷ் காஜா(13), கோவூரில் உள்ள அரசு பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை அண்ணன், தம்பி இருவரும் மற்றும் இவரது நண்பர் முஷாரப்(15), ஆகிய 3 பேரும் ஒரே வாகனத்தில் கோவூர் நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.

கோவூர் மின்வாரிய அலுவலகம் அருகே சென்றுகொண்டிருந்தபோது முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றபோது நிலைதடுமாறி மூன்று பேரும் கீழே விழுந்தனர். அப்போது பின்னால் வந்த லாரி அனஷ் காஜா உடலின் மீது ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். மற்ற இருவரும் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

இந்த சம்பவம் குறித்து தெரிந்தவுடன், பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து இறந்துபோன அனஷ் காஜா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரையும் தேடிவருகின்றனர். அண்ணன் கண் எதிரே தம்பி இறந்துபோன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. காலையில் மூன்றுபேரும் எங்கு சென்றார்கள் என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மேலும், விபத்து நடந்த இடத்தில் பூந்தமல்லி போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் ராஜன், போக்குவரத்து தலைமை காவலர் ஜெரோம் ஸ்வீட்டி பிரின்ஸ் ஆகியோர் அந்த வழியே சென்ற வாகன ஓட்டிகளை மடக்கி உரிய பாதுகாப்புடன் தலைகவசம் அணிந்துகொண்டு செல்ல வேண்டும், அப்படி செல்லாததால் இந்தப் பகுதியில் விபத்து நடந்து பள்ளி மாணவன் இறந்து விட்டதாகவும் இரண்டு பேர் காயமடைந்து விட்டதாகவும், வீட்டில் இருந்து கிளம்பும்போது நீங்கள் மீண்டும் வீட்டிற்கு வருவீர்கள் என உங்களது பிள்ளைகள் உறவினர்கள் காத்துக்கொண்டு இருப்பார்கள் அவர்களை ஏமாற்றும் விதமாக விபத்தில் சிக்கவேண்டாம் என அறிவுரை வழங்கினார்கள்.