தமிழ்நாடு

நண்பர்களுடன் குளிக்கச்சென்ற மாணவர் தடுப்பணையில் மூழ்கி உயிரிழப்பு

நண்பர்களுடன் குளிக்கச்சென்ற மாணவர் தடுப்பணையில் மூழ்கி உயிரிழப்பு

webteam

திருத்தணி அருகே கொசஸ்தலை ஆற்றின் தடுப்பணையில் குளிக்கச்சென்ற 7ஆம் வகுப்பு நீச்சல் தெரியாததால் பலியானார்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஆஞ்சநேய நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி டேவிட் என்பவரின் மகன் தருண் குமார் (12). இச்சிறுவன் பள்ளிப்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற தருண் குமார், மதிய உணவு இடைவேளையின் போது நண்பர்கள் ஐந்து பேருடன் சேர்ந்து வெளியே சென்றுள்ளார். மாணவர்கள் 6 பேரும் சேர்ந்து பள்ளிப்பட்டு சோளிங்கர் சாலையில் அமைந்துள்ள மேம்பாலம் அருகேயுள்ள கொசஸ்தலை ஆற்றின் தடுப்பணையில் குளித்துள்ளனர்.

அப்போது நீருக்குள் மூழ்கிய தருண் குமார் வெகு நேரமாகியும் தடுப்பணையிலிருந்து வெளியில் வராததால், சந்தேகம் அடைந்த நண்பர்கள் அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் ஓடி வந்து நீரில் தேடி பார்த்தும், தருண் குமாரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தடுப்பணையில் இறங்கி நீண்ட தேடலுக்குப் பின்னர் தருண் குமாரை சடலமாக மீட்டனர். இதுதொடர்பாக மேற்கொண்ட விசாரணையில் நீச்சல் தெரியாததால் தருண் குமார் நீரில் மூழ்கி இறந்ததாக கூறப்படுகிறது. பின்னர் மாணவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரித்து வருகின்றனர்.